பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரச்சாரம்


 "பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரச்சாரம்

தமிழகத்தின் நலனை மத்திய பாஜக அரசு காதில் வாங்கவில்லை. பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை" என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார். 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கடம்பூர், சிதம்பரபுரம், அகிலாண்டபுரம், கொப்பம்பட்டி, குருவி நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில் "பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்த போது தமிழக நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன் வைத்தோம். கச்சத்தீவை மீட்க வேண்டும், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்க்க வேண்டும், நீட் தேர்வினை ஒழிக்க வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கொண்டு வர வேண்டும், நெய்வேலியில் உள்ள என்.எல். சி யில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம்

ஆனால் எந்த கோரிக்கையும் மத்திய அரசு காதில் வாங்கவில்லை., ஆகையினால் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம். மத்தியில் பாஜக மீண்டும் ஒருவேளை ஆட்சிக்கு வந்தாலும் வரலாம், அதை பற்றி நமக்கு கவலை இல்லை. பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருக்கலாம், ஆனால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. தமிழக பிரச்சினைகளை தீர்க்காத தேசிய கட்சி உடன் கூட்டணி தேவையில்லை என்று அதிமுக முடிவு எடுத்து விட்டது.

திமுகவினர் தங்களது கூட்டணி கட்சியினரை அழ வைத்து வேடிக்கை பார்க்கின்றனர். திமுக கூட்டணியில் திருச்சியில் போட்டியிடும் மதிமுகவிற்கு சின்னம் தொடர்பாக கொடுத்து நெருக்கடியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மேடையிலே கண்ணீர் விட்டு அழுது கதறி உள்ளார். இது திமுகவின் வாடிக்கையான ஒன்றுதான். நம்ப வைத்து கழுத்தை அறுப்பார்கள், கூட்டணிக் கட்சியை மதிக்க மாட்டார்கள். 

ஆனால் அதிமுக கூட்டணிக் கட்சியை மதிக்கும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான். சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு வத்து செய்யப்படும், டாஸ்மார்க் கடைகள் மூடப்படும், கூட்டுறவு வங்கியில் வைத்த நகை கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் நிறைவேற்றவில்லை.

அனைத்து குடும்பத் தலைவைகளுக்கும் ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் தகுதி உள்ள குடும்பத் தலைவி தான் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதிமுக தொடர்ந்து கேள்வி எழுப்பிய பிறகு தான் 26மாதங்கள் கழித்து திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை வழங்கி உள்ளது. 

மழை வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு நிவாரணம் தரவில்லை என்பதற்காக உங்கள் அப்பன் வீட்டு சொத்தா என்று கேட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் எங்களாலும் கேட்க முடியும் உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? தேர்தலில் கொடுத்த வாக்குறுதி படி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும். திமுக பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் இந்த தேர்தல் மூலமாக ஆட்சி மாற்றம் வரவேண்டும் 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் வீட்டில் தனியாக இருக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் போதை பொருட்கள் புழக்கம் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைதியாக இருந்த தமிழகம் இன்று அமலிக்காடாக மாறிவிட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சித் தொடர்ந்தால் இந்த நாடு உருப்படாது .தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

நாடாளுமன்றத் தேர்தல் என்ற அரை இறுதி ஆட்டத்தில் நாம் வெற்றி பெற்று விட்டால் திமுக வெளியேறிவிடும், சட்டமன்ற தேர்தல் என்ற இறுதி போட்டிக்கு நாம் சென்று விடுவோம் என்றார்.

Previous Post Next Post