உக்கிர காளியை சாந்தப்படுத்திய ஆதிசங்கரர் ... ஹாத் காளிகா - கங்கோலிஹாட்

நாம் செல்லும் ஆதிகைலாய ஓம்பர்வத யாத்திரையில், கயிலைமலைவழிச்சாலையில் அற்புதமான கோவில்களை காண இருக்கிறோம். அப்படி ஒரு முக்கியமான கோவில்தான் ஹாத் காளிகா மகாகாளி கோவில்.8ம் நூற்றாண்டில் இந்த கோவில் நிறுவப்பட்டு இருக்கிறது. ஆதிசங்கரர் கால்நடைப்பயணமாக நேபாளத்தின் பசுபதிநாத் கோவிலில் இருந்து, கேதர்நாத் செல்லும்போது பல்வேறு மலைகளை நடந்தே கடந்து சென்றிருக்கிறார். 

அப்போது, ஒருபக்கம் சரயு நதியும், மறுபக்கம் ராம்கங்கா நதியும் பாய்கின்ற அழகான மலைக்கிராமமான கங்கோலிஹாட் என்ற ஊருக்கு சென்றிருக்கிறார். தேவதாரு மரங்கள் நிறைந்த மலைக்கிராமமான கங்கோலிஹாட்டில், அங்குள்ள மக்கள் காளிதேவியின் உக்கிரத்திற்கு அஞ்சி வாழ்ந்து வந்தது தெரியவர, மகாகாளியை ஒரு எந்திரத்தில் சாந்தப்படுத்தி, ஹாத் காளிகா என்கிற இந்த கோவிலை நிறுவி உள்ளார். ஆதிசங்கரர் வருகைக்கு பின்னர் மக்கள் அச்சமின்றி வாழ்வதாக சொல்கிறார்கள். 

இந்த கோவில் மாகாளி சக்திபீடமாக கும்பிடுகிறார்கள். ஆனால் சதிதேவியின் எந்தப்பகுதி இங்கு விழுந்தது என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. கொல்கத்தா காளிதேவியின் மறுவடிவமாக இந்த ஹாத்காளிகா மாதா கும்பிடப்படுவதாகவும் கருதுகிறார்கள். 

1200 ஆண்டுகளைக் கடந்த இந்த கோவில் தற்போது மிக அழகிய மலைப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. தற்போது இருக்கிற கோவில் ஜங்கம் பாபாவால் கட்டப்பட்டது. குமாவோன் படைப்பிரிவு ராணுவ வீரர்கள் பல்வேறு மேம்பாட்டுப்பணிகளை செய்து உள்ளார்கள். குமாவோன் படையின் இஷ்டதெய்வமாக ஹாத்காளிகா வழிபடப்படுகிறார். 

1918ல் குமாவோன் படைப்பிரிவினர் சென்ற கப்பல், புயலால் தாக்கப்பட்டு கவிழும் நிலை ஏற்பட்ட போது, இந்த ஹாத் காளிகா மாகாளி கப்பலை காப்பாற்றியது காரணமாக  இன்றளவும் குமாவோன் படைப்பிரிவின் இஷ்ட தெய்வமாக வணங்கப்படுகிறார். இன்றளவும் ராணுவத்தில் இந்தப்படைப்பிரிவினரின்  ‘காளிகா மாதாகி ஜே’  என்ற கோஷம் சிலிர்ப்பூட்டுவதாக கருதப்படுகிறது.  

இந்தக்கோவிலின் பூசாரி காளிதேவி உறங்குவதற்காக இங்குள்ள மலைமீது இரவில் இன்றளவும் பாய் ஒன்றை விரித்து வைப்பதாக சொல்கிறார்கள். அந்த பாய் காலையில் சென்று பார்த்தால் தானாகவே சுருட்டப்பட்டிருக்குமாம். இதனால் காளிதேவி இங்கு வந்து உறங்கிச்செல்வதாக கங்கோலிஹாட் மக்கள் நம்புகிறார்கள். 

கோவிலின் பல்வேறு பகுதிகள் குமாவோன் படைப்பிரிவால் அமைக்கப்பட்டு இருகிறது. தேவதாரு மரங்கள் நிறைந்து இருப்பதால், குளிர்காலத்தில் கூட மிதமான காலநிலை இங்கு இருக்கும் என்கிறார்கள். இங்குள்ள தற்போதைய காளிசிலை 1971ல் குமாவோன் படைப்பிரிவினர் நிறுவி இருக்கிறார்கள். படைப்பிரிவின் இஷ்ட தெய்வம் என்பதால் கோவிலின் பல கட்டுமானங்களை ராணுவமே அமைத்திருப்பது சிறப்பு. 

இந்தக் கோயிலில் புனித நெருப்பு பல காலமாக எரிந்து வருகிறது, அது காளிகா தேவியின் சக்தி என்று நம்பப்படுகிறது. மாகாளிகாவின் ஆசிகளைப் பெற ஏராளமானவர்கள் இங்கு வருகிறார்கள். மாகாளிகாவுக்கு மலர்களை அர்ப்பணித்தால் ஆரோக்கியமாகவும் செல்வந்தராகவும் மாறுவீர்கள் என்று கூறப்படுகிறது. 

சந்த் ராஜாக்களின் காலத்தில் இந்த மாகாளிக்கு மனிதர்களை பலிகொடுத்து இருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது. 

சில நூற்றாண்டுகளை கடந்த உயரமான தேவதாரு மரங்கள் நிறைந்த, அமைதியான தேவதாரு காட்டில் உள்ள இந்த கோவிலில் மனதார வேண்டுதல்களை வேண்டி துண்டுச்சீட்டுகளை மக்கள் சமர்ப்பிக்கிறார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் மணிகளை வாங்கி வந்து கட்டுகிறார்கள். எனவே கோவில் வளாகம் பித்தளை மணிகளால் நிறைந்து உள்ளது. 

மே20-ம் தேதி நாமும் தேவதாரு காட்டில் காளிகாவை வணங்குவோம் ரெடியா இருங்க...

Previous Post Next Post