கருத்துரிமையைப் பாதுகாக்க தனியாக இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்குகிறது -உ.வாசுகி

”தமிழகத்தில் கருத்துரிமை பாதிக்கப்படுவதால், கருத்துரிமையைப் பாதுகாக்க தனியாக இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க உள்ளது.” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கூறியுள்ளார்.


தூத்துக்குடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் உட்புகுத்துவது தொடர்ந்து வருகிறது. விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி பல்வேறு அடக்குமுறை செய்து சேலம் 8 வழி சாலை திட்டம், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைகிறது. இவற்றையெல்லாம் பார்க்கையில் அரசு எடுக்கும் கொள்கை முடிவுக்கு மாறாக யாரும் பேசக் கூடாது என்ற அதிகாரத்தில், ஆளும் அரசு போலீசார் மூலம் அடக்கு, ஒடுக்குமுறைகளை கையாள்கிறது. இதனால், தமிழகத்தில் போலீஸ் தன்  ராஜ்யத்தை நடத்துகிறது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அடக்குமுறையை,  ஒடுக்குமுறையை ஒருபோதும் சகித்து கொள்ளாது. மக்களில் கருத்துரிமைகளை பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து உரிமை பாதுகாப்பு இயக்கம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது. சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் 100 நாள்கள் மேலாகிறது. முகிலனை கண்டுபிடிப்பதில்  தமிழக காவல்துறை மெத்தனப் போக்கில் செயல்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் காவல்துறை தன் திறன் முழுவதும் பயன்படுத்தி முகிலனை  உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.


செனனைக்கு நீர் ஆதாரமாக விளங்க கூடிய  4 நீர்நிலை தேக்கங்களிலும் சேர்த்து மொத்தம் .23சதவீதம் தான் குடிநீர் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை மிக பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது. ஆனால் அதை மறுக்கும் விதமாக அமைச்சர் வேலுமணி பேசியது வேடிக்கையாக உள்ளது. நடந்த எம்.பி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். கம்யூனிஸ்ட் கட்சிகளை  இணைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.” என்றார்.


Previous Post Next Post