திருப்பூர் : இராணுவ வீரர் மனைவி தற்கொலை

திருப்பூரில் ராணுவ வீரரின் மனைவி தூக்கில் தொங்கிய படி பிணமாக மீட்பு! போலீசார் தீவிர விசாரணை!!
திருப்பூர் பாண்டியன் நகரை அடுத்துள்ளது சாய்குமரன்காலனி ஐந்தாவது தெரு. இத்தெருவில் வசித்து வருபவர் நர்மதா தேவி(33). இவரது கணவர் பிரகாஷ் சென்னை ஆவடியில் ராணுவ வீரராக பணியாற்றிவரும் நிலையில் தனது இரு குழந்தைகளுடன் வசித்துவந்தார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரகாஷ் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று காலை நர்மதா தேவியின் குழந்தைகள் படித்துவரும் தனியார் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் தினேஷ்குமாரின் செல்போனிற்கு வாட்சாப் மூலமாக நர்மதா தேவி வீட்டில் சேலையை கட்டி தூக்கில் தொங்குவது போல் படத்துடன் தனது குழந்தைகளை நன்றாக பார்த்துகொள்ளவும் என தகவல் அனுப்பி இருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் உடனடியாக நர்மதா தேவியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய படி உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நர்மதா தேவியின் உடலை இறக்கி பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு வந்த 15 வேலம்பாளையம் போலீசார் நர்மதா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் கணவருக்கு தகவல் தராமல் உடற்பயிற்சி ஆசிரியருக்கு தகவல் தெரிவித்ததில் ஏதேனும் மர்மம் உள்ளதா என நர்மதா தேவியின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post