திருப்பூர் போலீசுக்கு நடுரோட்டில் அடி உதை ; போதை வாலிபரால் பரபரப்பு

திருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே
குடிபோதையில் இருந்த வாலிபருக்கும்
போக்குவரத்து போலீசுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது
போலீசார் நடுரோட்டில் தரதரவென இழுத்து செல்லும் 
வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு.


 


திருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே குடிபோதையில் இருந்த வாலிபருக்கும் போக்குவரத்து போலீசுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் நடுரோட்டில் தரதரவென இழுத்து செல்லும் 
வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த முரளி என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவருடைய மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். அப்போது முரளி குடிபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.  இதையடுத்து  அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் பொன்னாங்கண் என்பவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் முரளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், போலீஸ் பொன்னாங்கண்ணியின் சட்டையும் கிழிந்தது. இந்த நிலையில் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சிலர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோவில் முரளி குடிபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபடுவதும், அவரை போலீசார் நடுரோட்டில் தரதரவென இழுத்து செல்வது போன்றும் உள்ளது. மேலும் முரளி போலீஸ் பொன்னாங்கண்ணியை காலால் எட்டி உதைப்பதும் மட்டுமின்றி, அவரை கடுமையாக தாக்குவது போன்றும், திடீரென அங்கிருந்த பொதுமக்கள் போலீசாரை கண்டித்து போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷமிடுவது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது. இதில் காயமடைந்த போலீஸ் பொன்னாங்கண் மற்றும் முரளி 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.