கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வு பிரச்சனை பேச்சுவார்த்தையில் உடன்பாடு - இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் வாபஸ்

கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வு பிரச்சனை பேச்சுவார்த்தையில் உடன்பாடு - இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் வாபஸ்


கோவில்பட்டி நகராட்சியில் சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அழகு முத்துபாண்டியன், நகர செயலாளர் சரோஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வீட்டு வரி உயர்வு சம்பந்தமாக அரசு ஆணைப்படி வரி உயர்வு செய்யப்பட்டது தொடர்பாக மாலைக்குள் நகராட்சி அலுவலகம் முன்பு விளம்பர பலகை வைக்கப்படும். இதுதொடர்பாக 3 நாட்களுக்கு ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்படும். திடக்கழிவு மேலாண்மை வழிகாட்டுதலின்படியே கட்டணம் வசூல் செய்வது, இது சம்பந்தமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் பின் வரும் காலங்களில் ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய குடிநீர் திட்டம் நிலுவையில் உள்ள 2 நீர்த்தேக்க தொட்டிகளின் கட்டுமான பணிகள் செப்.15-ம் தேதிக்குள் முடித்து பயன்பாட்டுக்கு விடப்படும். டிச.31-ம் தேதிக்குள் வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் 100 சதவீதம் வழங்கப்படும். குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட தெருக்களில் புதிதாக சாலை அமைக்கும் பணிக்கு நிதி அனுமதி பெற்று உடனுக்குடன் செய்யப்படும். தனித்தனி குடிநீர் குழாய் இணைப்புகள் அரசால் அனுமதிக்கப் பட்ட முறையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இந்த பணியை குடிநீர் வடிகால் வாரியம் செய்யும்பட்சத்தில், அதனை நகராட்சி பொறியியல் பிரிவு மூலம் கண்காணிக்க வேண்டும். குடிநீர் இணைப்பு பணிகளை கண்காணிக்க சர்வ கட்சி பிரதிநிதிகளை கொண்ட குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர்.