சத்தியமங்கலம் நகராட்சி கடைவீதியில் திடீர் மறியலால்

சத்தியமங்கலம் நகராட்சி, கடைவீதியில்  தானாக ஏற்பட்ட பாதாள குழிகளால் பொதுமக்கள் பாதிப்பு ! செப்பனிட கோரி திடீர் மறியலால் போக்குவரத்து பாதிப்பு.   சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் கடந்த  2016ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், 52 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தால், பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். நகரின் முக்கிய வீதிகளில் தோண்டப்பட்ட குழிகளில், பைப் லைன் பதிக்கப்பட்டது. அதன் பிறகு முழுவதுமாக குழிகளை மூடாமல், பெயரளவுக்கு மீண்டும் மண்ணை கொட்டிவிட்டு அப்படியே விட்டு விட்டு சென்று விடுவதால், ஆங்காங்கே சரக்கு லாரிகள் குழிகளில் இறங்கியும், குடிநீர் குழாய்கள் துண்டிப்பு ஏற்படுவதும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்திற்குள்ளாகி வருவதும் வாடிக்கையாகி விட்டது.இந்நிலையில் கடைவீதியில் நேற்று காலை திடீரென 40 அடி நீளத்தில் ஐந்து அடி ஆழத்தில் தானாக சாலையில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாலை பிளந்ததால், எந்த வாகனமும் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் குழி இருப்பது தெரியாமல், விபத்திற்குள்ளாகினர். இதனால் நகராட்சி நிர்வாகத்தால் சாலைக்கு சீழ் வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் சர்வ கட்சியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் மணிக்கூண்டு அருகே திரண்டனர். நகராட்சி பகுதியில் பழுதாகி உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும் என வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பியவாறு, ஊர்வலமாக புறப்பட்டனர். பவானி ஆற்று பாலம் சந்திப்பில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


சத்தியமங்கலம் போலீசார் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக பழுதான சாலைகள் முழுவதும், மண் நிரப்பபட்டு புதிய சாலைகள் அமைக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.