மக்கள்குறைதீர்க்கும் கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.



அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முறையாக குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு சூழல்களில் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளை மீட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடும் வகையில், சைல்டு - லைன் 1098 குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி சேவை மையத்திற்கு, கார்ப்ரேட் நிறுவனங்களின் சமூக வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.6.80 இலட்சம் மதிப்பிலான நான்கு சக்கர வாகனத்தை, சைல்டு - லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் அவர்களிடம் வழங்கினார்.



மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் பணி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து, பணியிடைக்காலமான ரா.ஜேசு என்பவரின் மனைவி முத்துலட்சுமி என்பவருக்கு, கருணை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணிநியமன ஆணையினையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில், முதலமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 22 திருநங்கைகளுக்கு, பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, சித்த மருத்துவ பிரிவின் மூலம், பொது மக்களுக்கு நிலவேம்பு காசாயத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாலசுப்பிரமணியன், சித்தமருத்துவர் லதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், சைல்டு லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post