கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம் :தூத்துக்குடி மாவட்டம் வர்த்தகரெட்டிபட்டி கிராமத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி,துவக்கிவைத்தார்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வர்த்தகரெட்டிபட்டி கிராமத்தில் கால்நடைத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு கோமாரி நோய் தடுப்பூசி மருந்தினை கால்நடை மருத்துவரிடம் வழங்கி தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கால் நோய் வாய் நோயானது கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தியில் மிகவும் பாதிப்பை உண்டாக்குகிறது. கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைதல், கறவை மாடுகளில் சினை பிடிக்காமை, இளம் கன்றுகள் இறப்பு, எருதுகளில் வேலை திறன் குறைதல் உண்டாகிறது. ஆகவே இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கும் பொருளாதார இழப்பை தடுப்பதற்கும் துரிதமாக தடுப்பு நடவடிக்கைகள் தேசிய அளவில் தடுப்பூசி மூலமாகவும் தீவித உயிர் பாதுகாப்பு முறையிலும் கால் நோய் வாய் நோய் தடுப்புத்திட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது 10வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் (2003-2004)-லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17 சுற்றுகள் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.



தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக மாவட்டம் முழுவதும் 1,22,250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மருந்துகள் 1,30,850 டோஸ்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பணியினை மேற்கொள்ள 60 குழுக்கள் கால்நடை உதவி மருத்துவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க நடப்பு குளிர்பதன அறை ஒன்று கோவில்பட்டியில் உள்ளது மற்றும் மொத்த பனிக்கட்டிகள் வரிசைப்படுத்தப்பட ஆழ்குளிர்பதனப்பெட்டி புதுக்கோட்டை, கருங்குளம், சாத்தான்குளம், உடன்குடி, நாசரேத், ஆறுமுகநேரி, கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பத்து கால் நடை மருந்தகங்களிலும் உள்ளது.


இம்மருந்தகங்களில் தடுப்பூசி மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடுவதற்கான ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய ஊசிகள் மற்றும் மருந்து அடைப்பான்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வர்த்தகரெட்டிபட்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி 750 கால்நடைகளுக்கு போடப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசிகளை தவறாமல் போட்டு நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார். நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குநர் சத்தியநாராயணன், உதவி இயக்குநர்கள் சந்தோஷ் முத்துக்குமார், அண்டணி சுரேஷ், செல்வக்குமார், சங்கர நாராயணன், வர்த்தக ரெட்டிபட்டி கால்நடை மருத்துவர் ஆனந்த ராஜ், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Previous Post Next Post