தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு செய்தார்.



தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சை பிரிவினை பார்வையிட்டு நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்:- டெங்கு காய்ச்சல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை சுகாதாரத்துறை மூலம் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் சிறப்பு வார்டு, குழந்தைகள் காய்ச்சல் வார்டு உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்யப்பட்டது. காய்ச்சல் மற்றும் பல்வேறு காரணங்களால் 47 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 நபர்களுக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து தேவையான மருந்துகளை வழங்கி வருகிறார்கள். தற்போது இவர்கள் பாதுகாப்பான நிலையில்தான் இருக்கிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் தாமாக மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.



உடனடியாக அரசு மருத்துவமனை வருகை தந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவாருர், வேலூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிக அளவில் உள்ளார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொடர் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே தலைமை செயலாளர் தலைமையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வாரத்தில் இரண்டு முறை காணொலி காட்சி மூலம் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி கல்வி துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகள் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார துறை மூலம் டெங்கு காய்ச்சல் குறித்து குறும்படங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளுர் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் ஒரு நிமிடத்திற்குள் கண்டறியும் வகையில் ரூ.25 கோடி மதிப்பில் 860 கருவிகள் 2 வருடங்களுக்கு முன்பாக வாங்கப்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்திடும் வகையில் தரமான பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஆகியோர் நிலவேம்பு கசாயத்தினை பொதுமக்களுக்கு வழங்கபடுவதை பார்வையிட்டார்கள். இந்த ஆய்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சின்னப்பன் எம்எல்ஏ மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநர் பரிதா செரின், துணை இயக்குநர் சுகாதார பணிகள் (தூத்துக்குடி) கீதாராணி, தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் பாவலன், உறைவிட மருத்துவர் சைலேஷ், உதவி உறைவிட மருத்துவர்கள் ஜெயபாண்டியன், இன்சுவை, முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார் மற்றும் மருத்துவர்கள், முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.


Previous Post Next Post