திருப்பூரில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் ஆய்வு


திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகள் கெட்டுப் போனதாக நாளிதழ்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் கு.மரகதம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாக துறை மாவட்ட நியமன அலுவலர்டாக்டர்.பி.விஜயலலிதாம்பிகை, மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.மணி ஆகியோர்  இணைந்து 22.11.2019 அன்று அங்கேரிபாளையம் அவிநாசிகவுண்டன் பாளையம் பகுதியிலுள்ள மையங்களை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த வேக வைத்த முட்டைகள் மற்றும் வேக வைக்கப்படாத முட்டைகள் ஆய்வு செய்தனர். தரமான முட்டைகள் வழங்கப்பட்டுள்ளதை முட்டைகளை தண்ணீரில் போட்டுப் பார்ப்பதன் மூலமும், சாப்பிட்டு பார்ப்பதன் மூலமும் உணவு பாதுகாப்பு அலுவலரால் உறுதி செய்யப் பட்ட பிறகு குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்பட்டது. மேலும் நல்ல முட்டைகள் வழங்க உறுதி செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப் படுவதுடன் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முட்டைகளை வேக வைப்பதற்கு முன்பாகவே முட்டைகளின் தரத்தை கண்டறிந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.