தேர்தல் பதிவான வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை உள்ள வளாகத்தில் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்

ஊரக உள்ளாட்சி தேர்தல் பதிவான வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை உள்ள வளாகத்தில் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் - ஆட்சியர் கந்தசாமி தகவல்


திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டம், ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாவட்ட முழுவதும் 18 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில், வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை உள்ள வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைத்து அதற்கு பொறுப்பாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலர் ஒருவர் நியமித்து, அவருடன் இணைந்து காவல் துறை அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். இக்காணிப்பு பணிகளை கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவலர்கள் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டும். மேலும், கண்காணிப்பு பணியின்போது கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்போது கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள திரையினை பார்வையிட வேட்பாளரோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபரோ அனுமதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறைக்கு வருகை புரியும் வேட்பாளரோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபரோ கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் திரையினை பார்வையிட வேண்டும்.
வேட்பாளரோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபரோ கட்டுப்பாட்டு அறைக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு செல்ல அனுமதி கிடையாது. கட்டுப்பாட்டு அறைக்கு வருகைபுரியும் போதும், வெளியே செல்லும் போதும் வேட்பாளரோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபரோ பார்வையாளர் பதிவேட்டில் பெயர், நாள் மற்றும் நேரம் ஆகியனவ பதிவு செய்து கையப்பமிட வேண்டும் ஆகிய அறிவுரைகளை பின்பற்றிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.