திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்


82.82 சதவித வாக்குப்பதிவு அதிகாலை வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைப்பு
திருவண்ணாமலை டிச.29- திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முன்தினம் நடந்த ஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தலில் 82.82 சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை விடிய விடிய வாக்குப்பெட்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து திருவண்ணாமலை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 341 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பனர் 860 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 6207 ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்பட மொத்தம் 7442 பதவியிடங்கள் உள்ளது. இதில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், பெரணமல்லூர், செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் தெள்ளார் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 4176 உள்ளாட்சி பதவியிடங்கள் இடம்பெற்றுள்ளது. இவற்றில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் போக மீதமுள்ள 2237 பதவிகளுக்கு மட்டும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. திருவண்ணாமலை உள்பட 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமுள்ள 1930 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்குச்சீட்டுகள் மூலம் தனித்தனியாக வாக்குப்பதிவுகளை பதிவு செய்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 17 பேர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் 180 பேர் ஊராட்சி மன்ற தலைவர் 473 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 2567 பேர் உள்பட மொத்தம் 9084 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியிலிருந்து 2 மணிநேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்பட்டது. பலஇடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஆண்கள் பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மாற்றுத்திறனாளிகள் வயதானவர்களை உறவினர்கள் குடும்பத்தினர் அழைத்துவந்து வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிந்தது பல இடங்களில் இரவு வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் அனைத்து வாக்குச்சாவடிகளிலுள்ள வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று விடியற்காலை வரை வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்துசேர்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு சதவிதம் குறித்து நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 8,65,267 வாக்காளர்களில் 7,16,624 பேர் வாக்களித்துள்ளனர். இது 82.82 சதவித வாக்குப்பதிவாகும். இவற்றில் ஆண்கள் 83.65 சதவிதமும் பெண்கள் 82.02 சதவிதமும் வாக்களித்துள்ளனர். நேற்று காலை வரை வாகனங்களில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு வாக்குப்பெட்டிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் போலீசார் மற்றும் அரசியல் கட்சி தேர்தல் முகவர்கள் முன்னிலையில் அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.  வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.