கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்

உயிரிழந்துவிட்டதாக தனது பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பாஞ்சாலை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமியிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெ.பாஞ்சாலை என்பவர் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமியிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் எர்ணாமங்கலம் கிராமத்தில் நி¬யாக வசித்து வருகிறேன். தற்போது வரும் 30ந் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு தேர்தல் ஆணையம் சார்பில் பூட்டு சாவி சின்னம் ஒதுக்கீடு செய்து ஓட்டுசேகரித்து வருகிறேன். மேலும் நடந்துமுடிந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் எர்ணாமங்கலம் ஊராட்சி வார்டு எண் 6ல் வரிசை எண் 25ல் நான் ஓட்டளித்துள்ளேன். இந்நிலையில் கடந்த 23ந் தேதி மாவட்ட ஆட்சியரகத்தில் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலில் நான் உயிரிழந்துவிட்டதாக எனது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வேட்பாளரான எனக்கு டம்மி போட்டவர்களது 4 பேர் பெயர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன தெரியவில்லை? இவ்வாறு தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலசபாக்கம் தாசில்தார் ராஜராஜேஸ்வரியிடம் கேட்டபோது ஆன்லைனில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தவறு எங்கு நடந்தது என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஓட்டுபோடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனது உயரதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டுவிட்டு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.