ஜாமீனில் வந்த மகனை வெட்டிக் கொல்ல முயற்சி  

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன் (55) இவரது மகன் விக்னேஷ் (24) இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சுந்தரராமன் இதற்கு மறுத்தாராம். இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி நிலத்திலிருந்த தந்தையிடம் சென்று விக்னேஷ் காதலியை திருமணம் செய்து வைக்குமாறு மீண்டும் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தந்தையின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக விக்னேஷை தண்டராம்பட்டு காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையிலடைத்தனர். பின்னர் 5 மாத தண்டனை முடிந்து விக்னேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பைக்கில் வெளியே சென்ற விக்னேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. சுமார் 8 மணியளவில் எதிர்வேடு பகுதியில் தலை கழுத்து கைகளில் பலத்த வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் உயிருக்கு போராடுவதை அப்பகுதி மக்கள் கண்டனர். உடனே அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தண்டராம்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த விக்னேஷின் பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். ஜாமீனில் வந்த விக்னேஷை வெட்டிக்கொல்ல முயன்றவர்கள் யார் சொத்து தகராறில் உறவினர்கள் யாரேனும் கொல்ல முயன்றார்களா? காதல் விவகாரம் தொடர்பாக கொல்ல முயன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தந்தையை கொலை செய்த அதே தேதியில் மகன் வெட்டுக்காயத்துடன் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



Previous Post Next Post