7ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: ரூ.1.50 கோடி புத்தகம் விற்பனையாகும் என எதிர்பார்ப்பு

 


திருப்பூர், ஜன. 28 -


திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா – 2020 ஜனவரி 30ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த கண்காட்சியில் மொத்தம் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவதுடன், ரூ.1.50 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர் புத்தகத் திருவிழா அலுவலகத்தில் செவ்வாயன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுத் தலைவர் மோகன் கே.கார்த்திக், செயலாளர் ஆர்.ஈஸ்வரன், துணைத் தலைவர் அ.நிசார் அகமது ஆகியோர் 17ஆவது புத்தகத் திருவிழா தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:


திருப்பூர் மக்களின் பேராதரவுடன் இந்நகரின் பண்பாட்டுத் திருவிழாவாக முத்திரை பதித்துள்ள புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ஜன. 30 முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை 11 நாட்கள் கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் நடைபெறுகிறது. இம்முறை 102 அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 42 புத்தகப் பதிப்பகங்கள், 60 புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர்.


புத்தக நிறுவனங்கள்


தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களான என்.சி.பி.எச்., உயிர்மை, கிழக்கு, பாரதி, காலச்சுவடு, எதிர், விகடன், விஜயா, பெரியார் சுயமரியாதை, நற்றிணை, ஆழ்வார்கள் ஆய்வு மையம், கீதா புக்ஸ், யுரேகா, துளிர், சாகித்ய அகாடமி, இஸ்கான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆங்கில புத்தக விற்பனை இரு அரங்குகளில் நடைபெறும்.


குழந்தை இலக்கியம், சிறுகதை, கவிதை, நாவல், கலை, அரசியல், வரலாறு, அறிவியல், பண்பாடு, சமயம், தத்துவம், சுயமுன்னேற்றம், சமையல் குறிப்புகள், மொழி அகராதி உள்பட பல தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வருகின்றன. மனநலம் குறித்த புத்தகங்களுக்காகவே தனி பதிப்பகம் இம்முறை இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சென்னை புத்தகத் திருவிழாவின்போது வெளியிடப்பட்ட புதிய புத்தகங்கள் திருப்பூர் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும்.


தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். காலை நேரம் பள்ளி குழந்தைகளுக்கு கலை அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வுகளும், மாலை நேரம் பொது மக்களின் சிந்தனைக்கு விருந்து படைக்கும் பல்வேறு கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இங்கு வாகனங்களை நிறுத்த கூடுதல் இடவசதி செய்யப்பட்டுள்ளது, கட்டணமில்லை. கேண்டீன் வசதி, செல்பி கார்னர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


தொடக்க விழா


மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் புத்தகத் திருவிழா அரங்கைத் திறந்து வைக்கிறார். நூறு பறையிசை முழங்கும் நிமிர்வு கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தினமும் மாலை நிகழ்வுகளில் முக்கிய ஆளுமைகள் ஆழி.செந்தில்நாதன், எழுத்தாளர் சூர்யா சேவியர், பேராசிரியர் இரா.காளீஸ்வரன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், இரா.திருநாவுக்கரசு ஐபிஎஸ்., கதை சொல்லி பவா.செல்லதுரை, டாக்டர் கவிதாசன், டாக்டர் மோகன் பிரசாத், கார்த்திகேயசிவசேனாபதி, கவிஞர் கே.ஜீவபாரதி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.


கலை நிகழ்ச்சிகள்


இத்துடன் கி.ராஜநாராயணனின் நாற்காலி நாடகம், போதி தர்மர் சிலம்பப் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம், பவளக்கொடி கும்மியாட்டம், கரிசல் கிருஷ்ணசாமி குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.


பிப்.4ஆம் தேதி மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் ஆகியோர் பங்கேற்று பரிசளிக்கின்றனர். பிப். 5ஆம் தேதி திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் 27ஆவது ஆண்டு விழா மற்றும் 2018 இலக்கிய விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.


விவாத மேடை


பிப். 8ஆம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏற்றம் பெருமா இந்தியப் பொருளாதாரம்? என்ற தலைப்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன், ஆடிட்டர் ஜி.சேகர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். நிறைவு நாளான ஞாயிறன்று பேராசிரியர் அப்துல் காதர் நடுவராகப் பங்கேற்கும் சிந்தனைப் பட்டிமன்றம் நடைபெறுகிறது.


புத்தகங்கள் வாங்கும் அனைவருக்கும் 10 சதவிகிதம் கழிவு வழங்கப்படும், ரூ.1000க்கு குறைவில்லாமல் புத்தகங்கள் வாங்குவோருக்கு புத்தக ஆர்வலர் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் 10 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.500 மதிப்பில் புத்தகங்கள் வழங்கப்படும்.


அரசால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் விற்கப்படாது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குழந்தைகளை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வர வாகன வசதி செய்யப்படும். நூலகங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு மொத்தமாக வாங்கப்படும் புத்தகங்களுக்கு சம்பந்தப்பட்ட புத்தக நிறுவனங்கள் 25 முதல் 30 சதவிகிதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்குவர். சுமார் 25 பள்ளிகளைத் தேர்வு செய்து அங்குள்ள நூலகங்களுக்கு ரூ.5000 மதிப்பில் புத்தகங்கள் இலவசமாக வழங்கவும் நூல் ஆர்வலர்கள் நிதி வழங்க உள்ளனர்.


கடந்த ஆண்டு ஏறத்தாழ 1 லட்சம் பேர் புத்தகத் திருவிழாவைக் கண்டு களித்தனர். சுமார் ரூ.1.25 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையானது. இந்த ஆண்டு பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்தஆண்டை விட அதிகரிக்கும், ரூ.1.50 கோடிக்கு புத்தக விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தனர்.


இந்த சந்திப்பில் யுனிவர்சல் பழனிச்சாமி, எம்பரர் பொன்னுசாமி, அரிமா எம்.ஜீவானந்தம், பிரிண்டிங் குமாரசாமி உள்ளிட்ட வரவேற்புக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post