சீர்மரபினர்  நலவாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் பிரசாந்த்  வேண்டுகோள்!

சீர்மரபினர்  நலவாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் பிரசாந்த்  வேண்டுகோள்.


 அரசாணை (நிலை) எண்.13, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்   நலத்துறை, நாள்: 20.04.2007 - ன்படி சீர்மரபினர்  சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென சீர்மரபினர்  நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.  சீர்மரபினர்  நலவாரியத்தில் பதிவு செய்ய தமிழ்நாட்டைச் சார்ந்த 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழில் மற்றும் விவசாயக்கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ள சீர்மரபினர்    இனத்தைச் சார்ந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இந்நலவாரியத்தில் பதிவுக்கான விண்ணப்பத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலகத்திலிருந்து பெற்று, சீர்மரபினர்  இனத்தைச் சார்ந்தவர்  என்பதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.


மேலும் விண்ணப்பத்துடன் வேலையில் இருப்பவர்  என்பதற்கான சான்றிதழை அமைப்புசாரா தொழிலாளாரை வேலைக்கு அமர்த்தியவர் பதிவுபெற்ற தொழிற்சங்கத்தின் தலைவர் பொதுச்செயலாளர்  அல்லது அவர்களால் அதிகாரமளிக்கப்பட்ட தொழிற்சங்க அலுவலர் தொழிலாளர்நலத்துறை உதவிஆய்வாளர்  அல்லது தொழிற்சாலைகள் துறையின் ஆய்வாளர் உதவிஆய்வாளரின் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பங்களை சரிபார்த்து ,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்  நலஅலுவலர்   சீர்மரபினர்  நலவாரிய உறுப்பினர்-செயலருக்கு அனுப்பி பதிவு செய்து அடையாள அட்டையை பெற்று உறுப்பினருக்கு வழங்குவார். சீர்மரபினர்  வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில், தகுந்த சான்றுகளுடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பரிந்துரைகளுடன் வாரிய உறுப்பினர்- செயலருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று தகுதியான உறுப்பினர்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்  நலஅலுவலர்  மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். வேறு நலவாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்கள் இந்நலவாரியம் மூலம் மீண்டும் அதே நலஉதவித் திட்டங்களை பெறத் தகுதியற்றவராவர். இந்நலவாரியத்தின் மூலம் முதியோர்  ஓய்வூதியம், ஈமச்சடங்கு நிதியுதவி, இயற்கை மரணம், விபத்து மரணம் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமணஉதவித் தொகை, மகப்பேறு, கருக்கலைப்பு, கருச்சிதைவு உதவித் தொகை மற்றும் கண் கண்ணாடி வாங்குவதற்கான உதவித் தொகை ஆகியவை வாரிய உறுப்பினர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படும். எனவே, மேற்படி வாரியத்தில் தகுதியுடைய நபர்கள் சேர்ந்து பயனடையுமாறு கலெக்டர் பிரசாந்த் கேட்டுக் கொள்கிறார்கள்.