அனைத்து விவசாயிகளுக்கும் வரும் 20ந் தேதிக்குள் காப்பீட்டு தொகை வழங்கப்படும்


காப்பீடு செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் வரும் 20ந் தேதிக்குள் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் உதவி இயக்குநர் (வேளாண்) அன்பழகன் கூறினார். திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று கோட்டாட்சியர் ஸ்ரீதேவி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தாசில்தார் கே.அமுல் வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி, மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க வேண்டும் டெல்டா மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுவதுபோல் திருவண்ணாமலை பகுதியிலும் விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டும் வட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் குறிப்பாக திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் அடுத்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் செங்கம் சாலை அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் வாரச்சந்தை நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் நலன் கருதி நெல் அறுவடை இயந்திரம் உளுந்து அடிக்க மிஷின் பயன்பாட்டுக்கு வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்கொள்முதல் செய்யப்படும்போது விவசாயிகளிடம் எடை போடும் தொழிலாளர்கள்  40 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.40வாங்குவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது கோட்டாட்சியர் ஸ்ரீதேவி விவசாயிகள் அவசியம் நீரை சேமிக்க வேண்டும் என்றார். மேலும் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2016-17 ஆண்டுக்கு ரூ.4கோடி காப்பீட்டுத்தொகை அரசு வழங்கியுள்ளது. எனவே வருகிற 20ந் தேதிக்குள் காப்பீடு செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன் தெரிவித்தார்.