திருப்பூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

திருப்பூர், பிப்.24: திருப்பூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோல்டன் நகர் பகுதியில் வசித்து வருபவர் எஸ்.கந்தசாமி என்கிற குரு(35), இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை குரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் குருவை போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செயது கைது செய்தனர். இந்த வழக்கானது திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின்மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஜெயந்தி திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், அபராதத்தொகையை கட்டத்தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் பரிமளா ஆஜராகினர்.