கோரோனா வைரஸ்க்கு மருந்து: தமிழ்நாட்டில் இது புது பிசினஸ்

 


குப்புற படுத்துக் கிடந்து யோகா செய்தால் கொரோனா வைரஸ் தாக்காது என்று யோகா டீச்சர் ஒருவர் தனது கணவரை வைத்து குரளிவித்தை காட்டிய வினோத சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.


சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வந்தாலும் வந்தது, நம்ம ஊரு உப்புமா வைத்தியர்களின் அலம்பல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது..!


கொரோனா வைரஸை சித்த மருத்துவத்தால் குணமாக்கிவிட முடியும் என்று சொன்ன சித்த மருத்துவ சிகாமணி திருத்தணிகாசலம் சீனாவிற்கு செல்ல வழி தெரியாமல் தவித்து வருகிறார். சித்த மருத்துவர் கூறிய மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்றோ, குணமாக்கும் என்றோ இதுவரை ஆய்வுப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, ஏனெனில் அதனை சோதித்து பார்க்க வேண்டுமானால் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க அவர் மருந்துடன் சீனாவிற்கு தான் செல்ல வேண்டும்..!


அதே போல சிவகங்கையில் உள்ள ஓட்டல் ஒன்றில், சின்ன வெங்காய தோசை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்று போலி விளம்பரம் செய்து காசுபார்த்து வருகின்றனர். அதே பாணியில் முகுந்தி என்ற யோகா டீச்சர், ஒருவரும் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த தன்னிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க யோகாசனம் ஒன்று உள்ளது என்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அளந்து விட்டிருக்கிறார்.


3 ஆண்டுகளாக யோகா மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்த அவர், தன்னுடைய சலப்பாசனம் என்ற யோகாவை 5 நாட்கள் செய்தால் போதும் கொரோனா வைரஸ் தாக்கவே செய்யாது என்றும், முற்றிய நிலையில் உள்ள கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோயாளிகளை கூட யோகாவால், தான் குணப்படுத்தி உள்ளதாக வாயால் வடை சுட்டார் முகுந்தி..!


திருப்பூரில் கிங் என்ற ஓமியோபதி டாக்டர் கொரனோ வைரசுக்கு ஏற்கனவே மருந்து இருப்பதாகவும், தான் சீனா சென்று சிகிச்சையளிக்க தயார் என்றும் கூறி உள்ளார். மருந்து விவரத்தை சீன தூதருக்கு அனுப்பியுள்ளார்.


அனைத்திற்கும் உச்சகட்டமாக யோகாவால் தன்னுடைய டி.என்.ஏவையே மாற்றிக் கொண்டதாக கூறி செய்தியாளர்களை கிறுகிறுக்க வைத்தார்.


ஒரு கட்டத்தில் இதனையும் உண்மை என்று நம்பி சிலர் எப்படி கொரோனா வைரஸை குணப்படுத்துவீங்க என்று கேட்டதற்கு அதனை செய்து காட்ட ஒரு சிட்டிங்கிற்கு 3 ஆயிரம் ரூபாய் செலவகும் என்றார். லேகியம் விற்பவர் போல முகுந்தி தனது அருமை பெருமைகளை கூறிக்கொண்டிருக்க, அருகில் மிக்சர் ஏதும் சாப்பிடாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் அவரது கணவர்..!


கணவரை வைத்து கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் யோகாசனம் என்று வித்தை ஒன்றை செய்து காட்டினார், மனைவியின் கண் அசைவிற்காக காத்திருந்த அவர் சிங்கிள் பேக்குடன், குப்புற படுத்து, மல்லாக்க படுத்து கை அசைவிற்கு ஏற்ப புரண்டு நிமிர்ந்து யோகாவையே குரளிவித்தை போல செய்து காட்டி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.


இந்த காட்சிகளை பார்த்தபோது யோகா டீச்சர் கொரோனா வைரசை மட்டும் இல்ல, குறட்டையை கூட விரட்ட முடியாது என்று, கூடி இருந்த செய்தியாளர்கள் கமெண்ட் அடித்தபடி கலைந்து சென்றனர்.


உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கொரோனாவுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளது.


இதுபோன்ற இக்கட்டான நேரத்தை பயன்படுத்திக் கொண்டு கொரோனாவுக்கு சித்தா, யுனானியில் மருந்து இருப்பதாக கூறி புதிதாக மோசடியில் ஈடுபடுவார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறையினரும் அறிவுறுத்துகின்றனர்.