திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பிரட், வினோத்கண்ணா, கார்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் தலைமையிலான குழுவினர் திருவண்ணாமலை மார்க்கெட் சிவன்படத்தெரு கன்னிக்கோயில் தெரு குமரக்கோவில் தெரு மற்றும் மாடவீதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட மொத்த விற்பனை கடை ஒன்றினை சிவன்பட தெருவில் நகராட்சி அலுவலர்கள் கண்டறிந்தனர். இந்த கடையில் ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு நகராட்சியில் அபராதம் செலுத்தி உள்ளனர். என்பதும் மீண்டும் அவரது நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது இதையடுத்து அலுவலர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அக்கடையின் பொருட்களை எதிரே பதுக்கிவைக்க இடம் கொடுத்திருந்த குடோன் நிர்வாகத்திற்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது இதுதவிர மேலும் 2 கடைகளுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ. 34 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதோடு ஒரு டன் அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் இதுபோன்ற திடீர் பறிமுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையிலுதம் குற்றச்செயல்களில் ஈடுபடும் நிறுவனத்தை சட்ட உதவியுடன் நிரந்தரமாக சீல்வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.