காய்கறி, மீன்கடைகளில் முண்டியடித்த கூட்டம்: கொரோனாவுக்கு சிவப்புக்கம்பளம் விரிக்கிறார்களா திருப்பூர் மக்கள்



ஊரடங்கின் ஐந்தாம் நாளான இன்று (ஞாயிறு) திருப்பூர் மக்கள் துளிகூட பொறுப்புணர்ச்சி இல்லாமல் மீன்கடைகளிலும், காய்கறி கடைகளிலும் கூட்டம் கூட்டமாக திரண்டனர். சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. 


கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களான காய்கரி, இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் நுழைவு பகுதியில் மாநகராட்சி சார்பில் கை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

 பொதுமக்கள் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் அதிகாலை முதல் கூட்டம் கூட்டமாக திரண்டு காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி வாங்கி சென்றனர். அங்கு வந்திருந்த கூட்டத்தையும், அவர்கள் முட்டி மோதிக்கொண்டு காய்கறிகள் வாங்கியதும், இறைச்சி வாங்கியதையும் பார்க்கும் போது பொதுமக்களிடம் துளிகூட கொரோனா பற்றிய விழிப்புணர்வோ, அச்சமோ இருந்ததாக தெரியவில்லை.

உலகமே கொரோனா பரவலின் வீரியத்தில் உறைந்து கிடக்க, திருப்பூர் மாநகர மக்களோ இந்த ஞாயிற்றுக்கிழமையை கொண்டாட்டத்துக்கான ஞாயிற்றுக்கிழமையாகவே கருதி விட்டார்கள் போல தோன்றியது. திருப்பூரில் உள்ள இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. 


ஒரு சில இறைச்சிக்கடைகளில் கோடுகள் போடப்பட்டு, இடைவெளியில் நிற்க வைத்திருந்தனர். நிறைய இறைச்சிக்கடைகள் இதை பின்பற்றவில்லை.

 


சந்தைப்பேட்டையில் உள்ள மீன் வி்ற்பனை மற்றும் காய்கறி கடைகள் மிக பரபரப்பாக செயல்பட்டது. பொதுமக்கள் கும்பல் கும்பலாக நின்று காய்கறி மற்றும் மீன்கள் தேர்வு செய்து வாங்கினர். சமூக இடைவெளி என்பதை துளிகூட யாருமே பின்பற்றவில்லை. வழக்கமான ஒரு ஞாயிற்றுக்கிழமை போல திரண்டு முண்டியடித்து மீன்களை வாங்கி மகிழ்ந்தனர். 


வைரஸ் பரவலின் வீரியத்தை மத்திய, மாநில அரசுகள் எடுத்து சொல்லித்தான் வருகின்றன. இனி ஒவ்வொருவரையும் கையை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தி இடைவெளியில் நிற்க வைத்தால் தான் நிற்பார்களோ என தோன்றியது. 


இதனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு வித்திடுவதாக அமைந்தது. இத்தாலியும், ஸ்பெயினும் கொண்டாட்ட மனநிலையில் கோட்டை விட்டு விட்டு, தற்போது வைரசை கட்டுப்படுத்த முடியாமல் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து பரிதவிக்கும் நிலையில், நம் திருப்பூரில் மக்கள் அதே தவறை செய்வதை பார்க்க முடிந்தது.


முதலிரண்டு நாட்கள் போலீசாரின் தடிகளுக்கு பயந்து வீடுகளுக்குள் இருந்த நிலையில், தற்போது போலீசார் பிடியை தளர்த்தவும், நிலைமை எல்லை மீறி போவதை காண முடிந்தது. திருப்பூர் ரோடுகளில் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை போல காலை 8 மணி வரை வாகனங்கள் பறந்து கொண்டு இருந்தன. 


 


 பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்யும் அரசின் நோக்கம் நல்ல நோக்கம் தான், அதே நேரம் இப்படி ஒரே இடத்தில் பொதுமக்கள் குவிவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தைப்பேட்டை மார்க்கெட் காய்கறி கடைகளை மொத்த வியாபாரத்துக்கு மட்டும் அனுமதிக்கலாம், அல்லது பல்லடம் ரோடு முழுவதும் ரோட்டிலேயே ஒவ்வொரு கடைக்கும் சுமார் 50 அடி இடைவெளி விட்டு கடைகளை அமைக்க செய்யலாம். அதுவும் இல்லாவிட்டால் காய்கறி மற்றும் மீன் கடை வியாபாரிகள் அனைவரிடமும் ஆலோசனை செய்து, திருப்பூர் சந்தைப்பேட்டை மார்க்கெட் வியாபாரிகளையும், மீன் வியாபாரிகளையும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என கடைகளை அமைக்க செய்யலாம்.


 

எப்படியாவது பொதுமக்கள் கூடி வைரஸ் பரவும் வண்ணம் முண்டியடிப்பதை தடுக்க செய்ய வேண்டும். பொதுமக்களும் தாங்களாகவே உணர்ந்து இடைவெளியையும், தற்காப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். 

இல்லாவிட்டால் பேராபத்தை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

 

 

 


 



 

Previous Post Next Post