சமூக இடைவெளியெல்லாம் காற்றில் பறந்தது: மளிகை, காய்கறி விலை உயர்வு

கொரோனா தற்காப்புக்காக நடப்பில் இருக்கும் ஊரடங்கின் ஏழாம் நாள் (திங்கள்) திருப்பூர் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு மட்டும் செல்லவில்லையே தவிர மிக இயல்பாகவே உலா வந்தனர்.


திருப்பூர் ரோடுகளில் வழக்கம் போல காலை 7 மணிக்கெல்லாம் பரபரப்பாக வாகனங்கள் சென்று வந்தன. போலீசாருக்கு இதை கண்டுகொள்ளாமல் இருக்க சொன்னார்களோ என்னவோ,  பொதுமக்கள் வீதியுலா வருவதை கட்டுப்படுத்தவில்லை.



மாநகரம் முழுவதும் தெருக்களில் வழக்கம் போலான ஒரு நடமாட்டம் இருந்தது. பனியன் கம்பெனி உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்ததே தவிர, பொதுமக்கள் ஊரடங்கின் அவசியத்தை உணர்ந்ததாக தெரியவில்லை.



நிறைய இடங்களில், மளிகை கடைகளிலும், காய்கறி கடைகளிலும் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை பொதுமக்கள் வாங்குவதை காண முடிந்தது. சிலர் கடைக்காரர்கள் இடைவெளி விட்டு நிற்க வைத்திருந்தனர். பல பேர் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.



திருப்பூர் தினசரி மார்க்கெட்டில் காய்கறி வாங்க கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதல் கே.எஸ்.சி., ஸ்கூல் ரோட்டில் உள்ள சிறு வியாபாரிகள் மற்றும் மார்க்கெட்டில் கடை விரித்துள்ள வியாபாரிகளிடத்தில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் திரண்டு வந்திருந்தனர். ஒரு இடத்தில் கூட இடைவெளி விட்டு நிற்பதையோ, நோய் தொற்றின் அவசியத்தையோ உணர்ந்ததாக தெரியவில்லை.



காய்கறி, மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். நிறைய பொருட்களை இல்லையென்று கூறி பின்னர் வரவைத்து தருவதாக கூறி அதற்கான விலையை இருமடங்காக கடைக்காரர்கள் வாங்குவதாகவும் குற்றம் சாட்டினர். 



பொதுமக்கள் திறந்திருக்கும் ஒரு சில கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டி இருப்பதால், இருப்பு வைத்திருக்கும் பல பொருட்களுக்க்கும் விலை உயர்வு செய்து கடைக்காரர்கள் அதீத லாபம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினர்.


பெரும்பாலான மளிகை, காய்கறி கடைகளில் வியாபாரிகள் மாஸ்க் அணியவில்லை. மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கை கழுவ ஏற்பாடுகள் செய்யபடவில்லை. பொருட்களை விற்று பணம் பார்ப்பதில் மட்டுமே வியாபாரிகள் குறிக்கோளுடன் செயல்பட்டதை காண முடிந்தது.


மாநகராட்சி உதவி பொறியாளர் கோவிந்த பிரபாகர் காய்கறி கடைகள் ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய திணறிக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது. 



மொத்ததில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அநியாய விலைக்கு திருப்பூரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கல் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


Previous Post Next Post