உழவர் சந்தை, அம்மா உணவகம், தினசரி மார்க்கெட்டில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு

திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தெற்கு உழவர் சந்தை, அம்மா உணவகம், தினசரி மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் இ.ஆப.,


அவர்கள் இன்று (27.03.2020)நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில் , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நமது மாவட்டத்தில் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோய் குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து 5 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் 1-ந்தேதிக்கு பிறகு பல்வேறு நாடுகளிலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த சுமார் 1156 நபர்கள் (நேற்று வரை) தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நோய்தடுப்பு நடவடிக்கையாக நமது மாவட்டத்தில் தேவையான அளவு முகக்கவசங்கள் மற்றும் சானிட்டைசர்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. நமது மாவட்டத்திலிருந்து முகக்கவசங்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1,20,000 உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்திலுள்ள பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள மளிகைக்கடைகளின் தொலைப்பேசி எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கும் மற்றும் பெரிய சூப்பர் மார்க்கெட் மூலம் டோர் டெலிவரி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்தை காக்கும் வகையில் கிருமி நாசினிகள் தெளிப்பதற்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி இன்று (27.03.2020) திருப்பூர் மாநகராட்சிக்குப் பகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், அம்மா உணவகம் மற்றும் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் கடைகளில் கூட்டமாக நிற்காமல் இடைவெளி விட்டு நிற்கவும் மற்றும் முககவசங்களையும் அணிந்துகொள்ள வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தங்குதடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக வீண் வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நோய் தடுப்பு நடவடிக்கையாக நமது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.க.சிவகுமார் ,திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் திரு.சுந்தரம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.