அரசு மருத்துவமனைக்கு இரண்டு அதிநவீன கார்டியோ மானிட்டர் கருவிகள்: இன்பதுரை எம்.எல்.ஏ., வழங்கினார்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக  சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது மார்ச் மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் எனவும்  சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடப்பு ஆண்டில் தலா ரூ.25 லட்சமும் வரும் நிதியாண்டில் ரூ.ஒரு கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.



இவ்வாறு பெறப்படும் நிதியிலிருந்து சம்மந்தபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ கழகம் மூலம் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.


இதை தொடர்ந்துராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை முதல் கட்டமாக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்த தொகையில் தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராதாபுரம், வள்ளியூர், கூடங்குளம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும், திசையன்விளை, பணகுடி, வடக்கன்குளம், கள்ளிகுளம், நவ்வலடி, துலுக்கர்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க தனது நிதியை பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அந்த மருத்துவ மனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களின் பட்டியலையும் அளித்திருந்தார்.


  ஆபத்தான கட்டத்தில் அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் நாடித்துடிப்பு இதய இயக்கம் ரத்த அழுத்தம் போன்றவற்றை ஒருசேர கண்காணிக்கும் கார்டியோ மானிட்டர் என்ற இரண்டு அதிநவீன மருத்துவ   கருவிகளை  தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெற்று ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அளிக்கும்படி இன்பதுரை எம்எல்ஏ தமிழக அரசிடம் கோரியிருந்தார்.


இதையடுத்து நேற்று ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அந்த 2 அதி நவீன கார்டியோ மானிட்டர் கருவிகளும் வந்தடைந்தது.இந்நிலையில் இன்று ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அந்தக் கருவிகளை பார்வையிட்டு அவைகள் செயல்படும் விதம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


 தொடர்ந்து அந்த கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை  அர்ப்பணித்தார்.இந் நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் மற்றும் ராதாபுரம் அதிமுக ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் முருகேசன், மதன்,  அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து  பெறப்பட்ட  மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு அர்ப்பணிப்பது தமிழகத்தில் இதுவே முதல் நிகழ்வு ஆகும்


Previous Post Next Post