தூத்துக்குடி காமராஜர் காய்கறி சந்தையினை நிரந்தரமாக மூடி, அரசு சார்பாக சந்தை அமைக்க வேண்டும்; -ஆட்சியருக்கு மனு

தூத்துக்குடி நகரின் மைய பகுதியில் எவ்வித அடிப்படை வசதியுமின்றி இயங்கி வரும் தனியார்  காமராஜர் காய்கனி சந்தையினை நிரந்தரமாக மூடி, அரசு மேற்பார்வையில் அரசின் இடத்தில் சந்தை அமைக்க வேண்டும் என மக்கள் மேம்பாட்டு கழக அமைப்பாளர் அதிசயகுமார் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

 


 

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

 

கடந்த மார்ச் மாதத்திலிருந்து Covid 19 தொற்றுநோய் வேகமாக இந்தியாவில் பரவி வரும் சூழலிலினை தொடர்ந்து ஊரடங்கு நிலை நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாங்கள் பிறப்பித்த 144 Crpc-ன்படியான உத்திரவிற்குப் பின்பு மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தடை செய்து பல மாற்றங்களை நமது மாவட்டத்தில் செய்ததின் மூலம் தாங்கள் தமிழ்நாட்டில் பாராட்டுக்குரிய மாவட்ட ஆட்சியராக திகழ்ந்து வருகின்றீர்கள்.

 

தூத்துக்குடி, பாளை ரோட்டிலுள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனிநபரின் இடத்தில் காய்கனி மொத்த வியாபாரம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இவ்விடத்தில் 25 கடைகள் செயல்பட வேண்டிய குறுகிய இடத்தில் 150க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றது. ஒரு கடைக்கு ரூபாய் 300 முதல் 1500 வரை தினசரி வாடகை கட்டணமாக அரசியல் மற்றும் பணம் செல்வாக்கில் உள்ள நபர் மார்க்கெட்டை நடத்தி வசூல் செய்து வருகின்றார். மேற்படி இடத்திற்கு வரும் காய்கனிகள் அனைத்திற்கும் மேற்படி தனிநபரே ஏஜெண்டாக இருந்து சந்தை விலையை நிர்ணயம் செய்து வருகின்றார். 

 


    

தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் காய்கனிகளை மொத்தமாக வியாபாரம் செய்யும் காமராஜர் காய்கனி மார்க்கெட்டை தாங்கள் மூடி அரசின் இடத்தில் மாற்று ஏற்பாட்டினை ஏற்படுத்தியுள்ளீர்கள். தங்களது நடவடிக்கையினால் மக்கள் சமூக இடைவெளியுடன் அத்தியாவசிய பொருட்களான காய்கனிகளை வாங்கிச் செல்கின்றார்கள். தாங்கள் காமராஜர் காய்கனி மார்க்கெட்டை தற்காலிகமாக மூடிய போது அங்கு கடை வைத்தவர்களுக்கு டோக்கன் வசதியுடன் பழைய பேருந்துநிலையம், வ.உ.சி. கல்லூரி மற்றும் நகரத்தின் பல பிரதான இடங்களில் மக்களின் சமூக இடைவெளிக்காக கடைகள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தீர்கள். 

 

மேற்படி கடைகள் அரசின் இடத்தில் மாநகராட்சியின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட பின்பும் இக்கடைகளுக்கு தினசரி வாடகையாக ரூ.300/- முதல் காமராஜர் காய்கனி மார்க்கெட்டை நடத்தி வந்த தனிநபர் வசூல் செய்து வருகின்றார். இவரது வேலையாட்கள் மேற்படி கடைகளுக்கு சென்று மார்க்கெட் திறக்கும் போது தங்களுக்கு கடை வேண்டுமென்றால் தினசரி தங்களுக்கு கொடுக்கும் கப்பமாகிய தொகையினை கட்டும்படி மிரட்டி பணம் வசூல் செய்து வருகின்றார்கள். இதனால் வியாபாரிகள் இந்த கப்பத் தொகையினை மக்கள் மேல் சுமத்தி காய்கனி விலையினை தாங்கள் இஷ்டம் போல் உயர்த்தி நிர்ணயம் செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டியது தாங்கள் தூத்துக்குடி மக்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும். 

 


 

தனிநபரின் ஆளுமையில் இருந்து வந்த காமராஜர் காய்கனி மார்க்கெட் ஆனது எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் குறிப்பாக கழிப்பிட வசதி கூட இல்லாமல் 25 கடைகள் இருக்க வேண்டிய இடத்தில் 150க்கும் மேற்பட்ட கடைகள் நெருக்கமாக வைத்து இயக்கி வருகின்றனர். இந்த மார்க்கெட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்கோ, கழிப்பிட வசதிக்கான இடங்களோ இல்லை. மார்க்கெட்டுக்கு வரும் நபர்கள் ஒவ்வொருவரை இடித்துக் கொண்டு ஜன நெருக்கத்துடனே மக்கள் நடமாடி வந்தார்கள். 

 

மக்கள் அதிகளவில் மேற்படி மார்க்கெட்டில் கூடுவதினால் தூத்துக்குடி பிரதான சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மக்களுக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறும் இடஞ்சலும் ஏற்பட்டு வருகின்றது. கொரானா தொற்றுநோய் காரணமாக வரும் காலங்களில் சமூக இடைவெளியுடன் மக்கள் தங்களது வாழ்வியலை மாற்றும் சூழல் உருவாகியுள்ளதால் எவ்வித அடிப்படை வசதியுமின்றி நடத்தப்பட்டு வரும் மார்க்கெட்டினை நிரந்தரமாக மூட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. 

 


 

ஆகவே, தாங்கள் காமராஜர் காய்கனி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடி, அரசு வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி நகரத்திற்கு வெளியே காய்கனி சந்தையை உருவாக்க வேண்டும். அரசின் வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டில் காய்கனி சந்தை செயல்படும் போது இடைத்தரகு ஏதுமின்றி மக்களுக்கு மேலும் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பதினால் தாங்கள் தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.என அந்த மனுவில் கூறியுள்ளார்.

 

தனி நபர் கட்டுப்பாட்டில் மார்கெட் செயல்படுவதால் இங்குள்ள கடைகளுக்கு அவர்கள் வைத்ததுதான் வாடகை, மேற்படி வாடகையை சரிகட்ட காய்கறிகளை விலையேற்றி விற்பதுடன், எடையையும் குறைத்து மோசடி செவதாக பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு புகார்களை அனுப்பியும் வந்தனர், 

 

தொடர் புகார் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு, காமராஜர் காய்கனி மார்க்கெட்டின் தலைவராக உள்ள சி.த.சுந்தரபாண்டியன் அலுவலகத்துக்கு மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அலுவலர்கள் 6 குழுவாக வந்து சோதனையிட்டனர்,. இதில் 2 குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காமராஜர் மார்க்கெட் அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு இருந்த பணியாளர்கள் வெளியில் செல்ல தடை விதித்தனர். 

 

தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மார்க்கெட்டில் எத்தனை கடைகள் உள்ளன. அதில் தினமும் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்தனர். இதே போன்று தூத்துக்குடியில் சுந்தரபாண்டியன் வீடு, மார்க்கெட்டுடன் இணைந்த விடுதி, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர் .அதற்கு பிறகான நடவடிக்கை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. 

 

ஆனால் எடை, அளவு குறைபாடு தொடர்பாக  தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இதுவரை ஆய்வு நடத்தியதே இல்லை என பொதுமக்கள் தமிழக அரசு அதிகாரிகள் மேல் குற்றம் சாட்டுகின்றனர், காரணம் இங்கு எப்போதும் எடை போடுவதற்க்கு இரண்டு மூன்று வாளிகளை வைத்து எடை குறைப்பு மோசடியில் ஈடுபடுகின்றனர், எடை குறைவது பற்றி கேட்டால் மிரட்டப்படுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது