அழகு கலைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாதாந்திர நிவாரணம்: 14 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு இ-மெயில் மனு

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல்வேறு தரப்பிலான தொழில்களையும், வாழ்வாதாரத்தையும்  ஒட்டுமொத்தமாய் காலி செய்து விட்ட நிலையில், அழகு கலைஞர்கள், சிகையலங்கார கலைஞர்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் முடங்கி உள்ளது.


எந்த வித வருமானமும் இல்லாமல் தவிக்கும் அழகு கலைஞர்கள், வாடகை, லோன்கள், மின்கட்டணம், மாதாந்திர செலவுகளுக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர். 


அகில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகுத்துறை சங்கத்தின் தலைவர் சங்கீதா சவுகான் தலைமையில், நாடு முழுவதும்  அழகுத்துறை சார் நிபுணர்களின் பிரச்சினைகளை இந்திய அரசு நிர்வாகத்துக்கு எடுத்து சென்று தீர்வு பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. 


இந்நிலையில் ஊரடங்கு தொடர்வதாலும், அழகுக்கலை நிலையங்களை மேலும்   திறக்க இயலாமல் போனதால், நாடு முழுவதும் அழகுக் கலை நிபுணர்கள் மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் சார்பில் பாரதப்பிரதமருக்கு, இ-மெயில் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. 


நாடு முழுவதும் கில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகுத்துறை சங்கத்தின் தலைவர் சங்கீதா சவுகான் தலைமையில் இந்த மனு அனுப்பும் நிகழ்வுகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இ-மெயில்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. 


அந்த மனுவில், ஊரக பகுதியில் இருக்கும் சிகையலங்கார, அழகு கலைஞர்களுக்கு, மாதம் ரூ. 10 ஆயிரமும், நகர்ப்புறத்தில் தொழில் நடத்துபவர்களுக்கு ரூ.15 ஆயிரமும் மாதாந்திர நிவாரணமாக வழங்க வேண்டும். வங்கிக்கடன்களுக்கான் தவணை கட்டும் காலம் தள்ளி வைக்கப்பட்டாலும், வட்டி விதிக்கப்படுகிறது. எனவே வட்டி விதிப்பதையும் 9 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். 50 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும், 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவக் காப்பீடும் செய்ய வேண்டும். போன், மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் 9 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட வேண்டும் என்பது உள்பட 14 கோரிக்கைகள் அந்த இ-மெயில் மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளன.


இதில் திருப்பூர் மாவட்டத்தில் , திருப்பூரில் அகில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகுத்துறை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அனிதாமூர்த்தி தலைமையில் அழகு கலைஞர்கள் பிரதமருக்கு ஏராளமான இ-மெயில்களில் கோரிக்கை மனுக்களை அனுப்பினர். 


நாடு முழுவதும் இருந்து அழகு கலைஞர்கள், சிகையலங்கார கலைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் பிரதமருக்கு இ-மெயில் செய்துள்ளபடியால் பிரதமரிடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.