இலவச மின்சாரத்தைக் காக்க ரத்தக் கையெழுத்து  போடவும் தயார்: திருப்பூர் விவசாயிகள் ஆவேசம்

தமிழகத்தில் வீரஞ்செறிந்த போராட்டத்தில் 63 விவசாயிகள் குண்டடி பட்டு உயிர்த் தியாகம் செய்து பெற்ற இலவச மின்சாரத்தைப் பறிக்க முயன்றால் விடமாட்டோம். இலவச மின்சாரத்தைக் காக்க விவசாயிகள் ரத்தக் கையெழுத்துப் போடவும் தயாராக இருக்கிறோம் என்று ஆவேசமாகத் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் கண்டியன்கோயில் மைதானத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்துப் பெறும் இயக்கம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்த இயக்கத்துக்கு கண்டியன்கோயில் ஊராட்சிமன்றத் தலைவரும், பிஏபி பாசன சபைத் தலைவருமான கோபால் தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஒரு பைசா மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகத்தில் விவசாயிகள் போராடி உயிர்த் தியாகம் செய்தனர். விவசாயம் பொய்த்துப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இலவச மின்சாரம் இருப்பதுதான் ஓரளவு விவசாயிகள் தாக்குப்பிடிக்க உதவிக் கொண்டிருக்கிறது. இந்த இலவச மின்சாரத்தையும் பறிப்பதற்கு மத்திய மின்சார சட்டத் திருத்தம் 2020 கொண்டு வருவதை ஏற்க மாட்டோம். இப்போது கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். தேவைப்பட்டால் ரத்தக் கையெழுத்துப் பெறுவோம். உயிரைக் கொடுத்தாவது இலவச மின்சாரத்தைப் பாதுகாப்போம் என்று கூறினார்.

விவசாயிகளிடம் ஒரு கோடி கையெழுத்துப் பெற்று ஜூலை 27ஆம் தேதி கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகள் கூட்டமைப்புத் திட்டமிட்ட அடிப்படையில் கண்டியன்கோயிலில் இந்த இயக்கம் நடைபெற்றது. இதில் திமுக வடக்கு மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் கெம்கோ ரத்தினசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி ஒன்றியப் பிரச்சாரக்குழுச் செயலாளர் எம்.மகாலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கண்டியன்கோயில் ஊராட்சித் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவசாமி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநிலச் செயலாளர் முத்து விஸ்வநாதன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்டச் செயலாளர் தெய்வசிகாமணி, சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், திமுக ஊராட்சிக் கழகச் செயலாளர் ஆர்.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், திமுக இளைஞரணி ஒன்றியத் துணை அமைப்பாளர் ரமேஷ் உள்பட இந்த கிராமத்து மக்களிடமும் கையெழுத்துப் பெறப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் இந்த இயக்கத்தை வாழ்த்திப் பேசினார்.

அனைத்து கிராமங்களிலும், கூட்டுறவு சங்கங்கள், பால் சங்கங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளையும், விவசாயக் குடும்பத்தாரையும் சந்தித்து கையெழுத்துப் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.