கோவையில் மூன்று கோயில்கள் சேதப் படுத்தியதற்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம்

கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தியதற்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருக்கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள்.

 


 

மயிலாடுதுறை ஆன்மிகப்  பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

 

 

கோயம்புத்தூரில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை கடும் கண்டனம் தெரிவிக்கிறது.  தொடர்ந்து வழிபாட்டுத் தலங்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது வேதனை அளிக்கிறது.

 

ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையான காவல்துறை தமிழக காவல்துறை என்ற பெயரெடுத்த தமிழக காவல்துறை தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.  ஊரடங்கு காலத்தில் பெரிய திருக்கோயில்கள் எல்லாம் நடை சாத்தப்பட்டு இருக்கக்கூடிய வேளையிலே கோவையிலே மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது தமிழக அரசின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது.

 

சேதப்படுத்திய உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாக அமையும் .

 

இந்துக் கோயில்கள் தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அமைதி பூங்காவாக விளங்கக்கூடிய தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டால்  மத ரீதியிலான பிரச்சனை ஏற்படும். அவ்வாறு பிரச்சினை ஏற்படாமல் முளையிலேயே கிள்ளி எறிய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

உடனடியாக தமிழக அரசு அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது திருக்கோயில்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

ஒவ்வொரு திருக்கோயிலிலும் பட்டா புத்தகம் வைத்து ரோந்து பணியில் ஈடுபடக் கூடிய காவலர்கள் அதில் கையொப்பமிட்டு உயர் காவல் அதிகாரிகள் அதை வாரத்திற்கு ஒருமுறை பார்வையிட வேண்டும். திருக்கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் .

 

மத வழிபாட்டு தலங்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம் தன் கடமையை எவ்வித பாரபட்சமும் இல்லாமல் செய்ய வேண்டும் .

 

மத வழிபாட்டு தலங்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்ற வேண்டும். அந்த சட்டத்திலேயே மத வழிபாட்டுத்தலங்கள் தாக்கியவர் மீது கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். ஓராண்டிற்கு அவர்கள் பிணையில் வரமுடியாத படி சட்டப் பிரிவுகள் அந்த சட்டத்தில் சேர்க்க வேண்டும். மத வழிபாட்டு தலங்களை பாதுகாக்க தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous Post Next Post