கொரோனா காலம்: வருமான இழப்பை சமாளிக்கும் வித்தைகள்

கொரோனா வைரஸ் பரவி வருகிறது சீனாவை முற்றிலுமாக முடக்கிவிடும். சீனா பொருளாதாரத்தில் சரிந்துவிடும் என பல தரப்பிலும் பேச்சு விழுந்தது சாதாரண சாலையோர மக்கள் கூட இதுகுறித்த விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாருக்கும் தெரியவில்லை இந்த நிலை இந்தியாவிற்கும் வரும் கடைக்கோடியில் உள்ள நாமும் இதில் பாதிக்கப்படுவோம் என ஒருவரும் நினைத்துக்கூட பார்க்காத சமயம் அது. 
அடுத்தகட்டமாக இத்தாலி பிரான்ஸ் அமெரிக்கா என ஒவ்வொரு நாடுகளாக கொரோனா தன் கொடிய கரங்களை கொண்டு வாரி அணைத்துக் கொண்டது. அந்த சமயத்தில் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருவன் தன் கால் தடத்தை பதித்து இருந்தது. அப்பொழுது இந்தியாவில் ஊரடங்கு என்ற ஒரு வார்த்தையும் பிரபலமாகியது . இதனைக் கருத்தில் கொண்ட இந்திய அரசும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தியது. ஆரம்பத்தில் இதனால் ஏழைகள் பலரும் பாதிக்கப்பட்டனர். அதாவது தங்களின் அண்டை மாநிலங்கள் மற்றும் தொழில் வாய்ப்பும் மிகுந்த பகுதிகளில் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் இருந்து மக்கள் தொழிலுக்காக புலம்பெயர்ந்து இருந்தனர்.  இவர்கள் ஊரடங்கு காலத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததாலும் தங்களது உற்றார் உறவினர்களை காண வேண்டும் என்ற ஆர்வத்தினால் சொந்த ஊருக்குச் செல்ல முனைந்தனர்.
 ஆனால் ஊரடங்கு என்ற ஒன்று அவர்களுக்கு மிகப் பெரும் இடையூறாக இருந்தது. போதிய கால அவகாசம் கொடுத்திருக்கலாம் என்ற ஒரு கோரிக்கையும் அப்போது எழாமலில்லை. இதனால் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டனர். சொந்த ஊர் சென்றால் நிம்மதியாக பிழைத்துக் கொள்ளலாம் கால்வயிறு கஞ்சி குடித்தாலும் சொந்த வீட்டில் இருந்து கொள்ளலாம் சொந்த பந்தம் இல்லாத ஊர், உற்றார் உறவினர் இல்லாத இடம் என இங்கிருந்து வாழ்வதைவிட சொந்த ஊர் சென்று மடிந்து போகலாம், என்ற அவர்களின் எண்ண ஓட்டம் இத்தகைய நிலைக்கு அவர்களை தள்ளியது.
 இந்த காலகட்டத்தில் சொந்த ஊரில் இருந்த நடுத்தர மக்கள் மிகவும் மகிழ்ச்சியான ஒரு விடுமுறை ஆகவே இந்த ஊரடங்கு காலத்தை கருதினர். தினமும் கறிசோறு சலிக்காத பொழுதுபோக்கு குடும்பத்தினருடன் அளவளாவல் என மகிழ்ச்சியான மனப்பாங்குடன் இந்த ஊரடங்கை கழித்தனர். 
இதன் முக்கிய காரணம் வருமானம் என்ற ஒன்று நிலையானது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை ஊர் மொத்தமும் கடைகளை அடைத்து உள்ளது என்ற நிலையில் மீண்டும் கடை திறந்தால் இயல்பான நிலைக்குத் திரும்புவோம் என்ற எண்ண ஓட்டம் அவர்களை இந்த சூழ்நிலைக்கு கொண்டு சென்றது என்பதைவிட பழகினர் என்பதே நிதர்சனமான உண்மை. இதன் விளைவுகளை இவர்கள் உணர ஆரம்பித்த தருணம் இவர்களை மிக மோசமான நிலைக்குத் தள்ளியது.
 ஆம், ஊரடங்கு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்கள் தற்பொழுது மிகவும் சிக்கலான ஒரு சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். ஆனால் ஊரடங்கு வருமானம் என்று தவித்த பெரும்பாலான ஏழை தொழிலாளர்கள் தற்போது வருமானம் பார்க்க தொடங்கியுள்ளனர். எப்படி துவங்கியது இந்த வேற்றுமை? விரிவாக பார்க்கலாம்,
‘தினமும் உழைத்தால் தான் சோறு என்ற அடிப்படையில் பணியாற்றிய மக்களுக்கு சேமிப்பின் அவசியத்தை இந்த ஊரடங்கு நிச்சயம் உணர்த்தி இருக்கும் அப்படிப்பட்ட நிலையில் ஊரடங்கு காண தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுமே இத்தகைய தொழிலாளர்கள் பணிக்கு சென்றதுடன் தாங்கள் சம்பாதிக்க துவங்கிய பணத்தை சேமிப்பது முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினர். இதனால் அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்க துவங்கினர்.
ஆனால் நடுத்தர மக்களோ ஊரடங்கு காலத்தில் தாங்கள் வைத்திருந்த பொருட்கள் மூலமாக சந்தோஷமாக இருந்தனர் ஆனால் ஊரடங்கு தளர்த்தப் பட்ட பிறகு தற்பொழுது கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு நிறுவனங்கள் திறந்த நிலையில் வருமானம் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத பொருட்கள் தங்களுக்குத் தேவையில்லை என்பதை மக்கள் உணரத் துவங்கினர்.
இதனால் ஆடைகளை விற்பனை செய்யும் துணிக்கடைகள் கூட தற்பொழுது காற்று வாங்க துவங்கியுள்ளது. 10,000 ரூபாய் ஊதியம் பெற்ற நபர் கூட மாதத்திற்கு 1,000 முதல் 2,000 ரூபாய் வரை ஆடைகளுக்கு என செலவிட்டு வந்த நிலையில் தற்பொழுது ஆடைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இருப்பதை வைத்து இன்னும் 6 மாதம் ஓட்டலாம் என்ற நிலைக்கு மாறியுள்ளனர். இதன் காரணமாக துணிக்கடைகள் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது .
அத்தியாவசியப் பொருட்களில் உணவுக்கு அடுத்த இடத்திலுள்ள உடை தற்பொழுது வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்றால் அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ள இருப்பிடம் என்ற மிக முக்கியமான ஒரு விஷயம் அதளபாதாளத்தில் விழுந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை நம்பி ஏராளமானோர் வீடுகளை வாடகைக்கு விட்டு இருந்தனர் . தற்பொழுது அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளதால்எங்கு நோக்கினும் வீடு வாடகைக்கு என்ற பதாகைகள் நம்மை வரவேற்கவே செய்கின்றன.
அதே போல் ஏராளமானோர் அவசிய தேவைகள் இல்லாத அனைத்து பொருட்களுமே மக்களின் நுகர்வு குறைந்து விற்பனையை இழந்து நிற்கின்றன.  இதன் காரணமாக பெருநிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க துவங்கியுள்ளனர்.
 அதேபோல சிறு நிறுவனங்கள் கட்டிட வாடகை பணியாளர்களுக்கான ஊதியம் மூலப்பொருட்கள் என எவற்றையும் வருமானத்தைக் கொண்டு சமாளிக்க முடியாத சூழலில், மேலும் கடன் பெறவும் முடியாமல் வியாபாரத்தை தொடர்வதா, வேண்டாமா?  எப்போது இந்த நிலை சீராகும்? என புரியாமல் தவித்து வருகின்றனர்.
 எதிர்பாராத இந்த சூழல் பலருக்கு நஷ்டத்தையும் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் பறித்துள்ளது. இதனால் பல லட்சம் பேர் தங்கள் வேலைவாய்ப்பை இழப்பதுடன் வருமான வாய்ப்பையும் இழந்து வருகின்றனர்.
 இத்தகைய ஒரு சூழல் 2002ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாம் கண்டிராத ஒரு சூழல்; அதாவது 2002ஆம் ஆண்டு என்பது பத்து ரூபாய் எடுத்து செலவு செய்பவர்கள் மிகவும் குறைவானவர்களே பணத்தின் மதிப்பு என்பது மிகவும் அதிகமாக இருந்த காலகட்டம் அது பணத்தின் மதிப்பு உயர்ந்து காணப்பட்ட காலகட்டம் அதோடு நிறைவடைந்தது என்று கூட சொல்லலாம் . 
பின்னர் பொதுமக்களிடையே ஏற்பட்ட பணப்புழக்கம் அதிகரிப்பு மக்களின் நுகர்வு தன்மையை அதிகரித்தது. இதனால் பொருளாதாரம் சீராகவும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து காணப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 2000மாவது ஆண்டு வரையிலும் வளர்ந்த வளர்ச்சியையும் தற்பொழுது இருபது ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த வளர்ச்சியும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இருபது ஆண்டுகளில் வளர்ச்சி என்பது மிக அதிகம் இன்று சாதாரணமாக ஒருவர் 100 ரூபாய் கொண்டு வந்தாலும் அது ஒரு நாளைய செலவைக்கூட ஈடு கட்டாது அப்படிப்பட்ட ஒரு சூழலில் திடீரென பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுள்ள சூழலில் இதனை எவ்வாறு நாம் சமாளிப்போம்.
 கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நாம் மேற்கொண்டு வந்த பழக்கவழக்கங்களை எப்படி மாற்றுவது என்று பலரும் புரியாமல் தவித்து வருகின்றனர். இத்தகைய நிலையை எதிர்கொள்ள நாம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயம் இதுபோன்ற நிலையில் வைரஸ் பாதிப்பு எப்பொழுது முடியும் என்று கணிக்க முடியாத ஒரு சூழலில் முதலில் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது அத்தியாவசிய பொருட்களுக்கான முன்னுரிமை. அப்படிப்பட்ட நிலையில் வேலைவாய்ப்பை உறுதி செய்துகொண்டு முதலில் நாம் அத்தியாவசிய பொருட்களான உணவு பொருட்கள் நுகர்வை சீராக மேற்கொள்ள வேண்டும். கையில் எப்பொழுதும் பணத்தை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் 100 ரூபாய் சம்பாதிக்கும் நபர் முழு பணத்திற்கும் உணவுப்பொருட்களை20 ரூபாய்க்கு உணவுப்பொருட்களை வாங்கியபின் 80 ரூபாய் சேமிக்க வைக்க வேண்டும்.
 இதில் அன்றாட செலவுகளுக்கு 20 ரூபாய் என சென்றாலும் 60 ரூபாயாவது ஒரு நபர் சேமிக்கும் பட்சத்திலேயே அடுத்து வரக்கூடிய காலகட்டத்தை கடந்து செல்லும் மன தைரியம் பிறக்கும். இது காலம் கடந்த தெளிவு என நீங்கள் நினைத்தால் தற்போதும் காலம் கடக்கவில்லை; காலத்தை நாம் கடத்தாமல் தற்பொழுது சேமிப்பின் நோக்கத்தை உணர  வேண்டும். ஏற்கனவே கடன் பெற்றவர்கள் பல்வேறு வியாபார பணிகளை மேற்கொண்டு வந்தவர்கள், வீடு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டவர்கள் என பலரும் அடுத்து என்ன செய்யலாம் ஊரடங்கு காலம் எப்போது முடியும் மீண்டும் இயல்பு நிலை எப்போது திரும்பும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 இந்த பணிகள் சுணக்கம் இன்றி நடந்த வரையில் தான் பணவரவு என்பது அதற்கான சுழற்சி என அனைத்தும் சீராக சென்று வரும். தற்பொழுது இதில் எந்த பணிகள் நிறுத்தப்பட்டாலும் அதற்கான எதிரொலிப்பு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்பது நிதர்சனம். உதாரணமாக தற்போதைய சூழ்நிலையில் கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்ய பணம் இன்றி நிறுத்தப்பட்டால், அதற்கான பணியில் ஈடுபட்டு வந்த பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், வருமான இழப்பையும் சந்திக்க நேரிடும்.
 இதனால் அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரும் கடுமையான வருவாய் இழப்பை சந்திப்பதுடன்,  இவர்களை நம்பியுள்ள ஏராளமான சிறு தொழில் முனைவோர்கள் பாதிக்கப்படுவார்கள். காரணம், இவர்களது நுகர்வுத் திறன் முற்றிலுமாக தகர்க்கப்பட்டு இருக்கும்.  அத்தகைய சூழலில் இவர்களிடம் இருக்கக்கூடிய சிறு தொகையும் உணவுக்கு மட்டுமே செலவிடப்படும். அதுவரையிலும் இவர்கள் செலவிட்டு வந்த பலவிதமான பொருட்களின் தேவையும் இவர்களுக்கு அர்த்தமற்றதாகிவிடும். அதனால் அவற்றை விற்பனை செய்துவந்த சிறு வியாபாரிகள் வருமானத்தை இழப்பர்; அவர்களின் குடும்ப  வருமானம் குறைந்து அடிப்படை தேவையான உணவுக்கு மட்டுமே செலவிடும் ஒரு சூழல் உண்டாகும். 
இது ஒரு சுழற்சி முறை பொருளாதார சரிவு என்று நாம் கணக்கில் கொள்ளலாம். 2000வது ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்து பழகாதவர்களுக்கு இது மிக மோசமான காலகட்டமாக இருக்கும் என்பது நிச்சயம்.
 அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு தொலைதொடர்பு வசதிகள் கிடையாது சம்பாதிக்கும் தொகை சிறிய அளவிலும் அதைக்கொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்தவர்கள். இவர்களின் பெற்றோர்கள் எதிர்கொண்ட முறைகள் இவர்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம். தேவையான பொருள் கண்முன்னே இருக்கும், ஆனால் அதனை வாங்க காசு இருக்காது. கிடைக்கும் பணம் உணவிற்கு பற்றாது. எனவே அவை இல்லாத வாழ்க்கையை வாழ பழகி இருப்பார்கள் இவர்கள். 
ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் பிறந்து வளர்ந்த சமூகத்தினர், இந்த காலகட்டத்தை சிறிதும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லாதவர்கள். ஏழ்மை நிலை கொண்டவர்களும் நடுத்தரக் குடும்பத்தினரும் என அனைவர் கையிலும் பணப்புழக்கம் என்பது சற்றேனும் நிறைந்திருந்த காலகட்டம். விரும்பியதை சிறிது நாள் கழித்தாவது வாங்கிவிடலாம் என்ற ஒரு நம்பிக்கை விதைக்கப்பட்டிருந்த காலம். தேவையான பொருள் எதுவென்றாலும் கட்டாயம் தேவை என்ற மனநிலை இவர்களுக்கு அதிகரித்தது. இதனால் தேவையான பொருட்கள் என்ற நிலை போய் தேவையற்ற பொருட்களையும் வாங்கிக் குவிக்க துவங்கினர்.
 தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது மீண்டும் அனைவரையும் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இருந்த நிலைக்கு தள்ளி வருகிறது, என்றால் பலராலும் ஏற்க முடியாது. ஆனால் உண்மை அதுதான். இத்தகைய சூழலில் தேவையற்ற பொருட்களை வாங்காமல் தவிர்ப்பதும், செலவுகளை மிக அவசியம் எனில் மட்டுமே செய்வதும், அவசியமற்ற ஊர் சுற்றல், ஆடம்பரங்களை அறவே ஒதுக்குவது, பணிக்கு தவறாமல் செல்வது, வேலை இழப்பை சந்தித்தவர்களும் கிடைத்த வேலைக்கேனும் செல்வது, என வருமானத்தை தவறவிடாமல் செலவைக் குறைத்து சேமிப்பை பெருகினால் மட்டுமே இத்தகைய சூழலை ஒரு ஆண்டிலாவது நாம் கடக்க முடியும் என்பது திண்ணம்.