ஊட்டி நிலச்சரிவுக்கு காரணம் என்ன... மண், நீர்வள விஞ்ஞானி ஆய்வு

ஊட்டி அவலாஞ்சி அருகே நிலச்சரிவு ஏற்பட்டதற்கு, ஒரே நாளில் அதிகபட்ச மழை, எமரால்டு பகுதியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப, போதிய வடிகால் அமைப்புகள் இல்லாதது தான் முக்கிய காரணம், என, இந்திய மண் மற்றும் நீர் வள நிறுவன முதன்மை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

 


 

நீலகிரி மாவட்டம், ஊட்டி அவலாஞ்சி, எமரால்டு பகுதியில், கடந்த ஆண்டு ஆக., மாதம் போலவே, நடப்பாண்டும், இதே மாதம் முதல் வாரத்தில் அதிக மழை பெய்தது. கடந்த ஆண்டு, ஆக., 8ம் தேதி, இப்பகுதியில், 910 மி.மீ., பதிவாகியது. அப்போது, வனப்பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு, அவலாஞ்சி மின் உற்பத்தி நிலையம் அருகே பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, கடந்த 6ம் தேதி, அதே பகுதியில், 581 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதன் அருகே உள்ள, எமரால்டு பகுதி சத்தியா நகரில், வருவாய் நிலத்தில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை, இந்திய மண் மற்றும் நீர் வள நிறுவன முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

*கடந்த ஆண்டு இதே பகுதியில், இதே மாதத்தில் அதிகபட்ச மழை பெய்தது. அதேபோல, நடப்பாண்டும் அதிகபட்ச மழை பெய்ததற்கு, கடந்த இரு மாதங்களில் பெய்ய வேண்டிய பருவமழை அளவு குறைந்ததும், முக்கிய காரணம். நம் காலநிலையில், கடந்த, ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களால், நீர்சுழற்சி முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடச்சி மலை தொடரில், மழை மேகக் கூட்டங்கள், அவலாஞ்சி பகுதியில் உள்ள மழை காடுகளால் தடுக்கப்பட்டு, குறைவான நேரத்தில் அதிக மழை பெய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது*.

 

*எமரால்டு பகுதியில் ரசாயனங்களால், மண் சத்து இழந்து உள்ளது. இப்பகுதியில் நிலத்தடி நீர் செல்ல சரியான வடிகால் அமைப்புகள் இல்லை. இந்த காரணத்தால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு விவசாயம், குடியிருப்பு அமைப்பது போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கும். வரும் ஆண்டுகளிலும், பருவமழை குறிப்பிட்ட காலத்தில், பெய்யாதபோது, இதே போன்று, குறுகிய காலத்தில் அதிகமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், பேரிடர்களை தவிர்க்கலாம். இவ்வாறு, மணிவண்ணன் கூறினார்.