போலி பிராண்டுகளில் அரிசி விற்பனை... அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் புகார்

கடந்த சில மாதங்களாக திருப்பூர் சுற்று பகுதிகளில் வெளியூரில் இருந்து அரிசி மூட்டைகளை அனுமதியின்றி கொண்டு வந்து சாலையோரங்களில் குறைந்த விலைக்கு  தரமற்ற அரிசியை போலி கம்பெனி பெயரில் விற்பனை செய்வதாகவும், இதனால் அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி மண்டி உரிமையாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், பொதுமக்களும் ஏமாற்றப்படுவதாக புகார் தெரிவித்து வந்தனர். 

 


 

இந்தநிலையில்  திருப்பூர் முத்தணம்பாளையத்தில் இருந்து செவந்தாம்பாளையம் செல்லும் சாலையோரத்தி லாரியை நிறுத்தி ஒரு சிப்பம் அரிசி ரூ.800 க்கு விற்பனை செய்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த திருப்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், அரிசி மற்றும் மொத்தவிற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்த தனலட்சுமி ரைஸ்மில் உரிமையாளர் கவிதா அங்கு வந்து தட்டி கேட்டுள்ளார்.

 

மேலும் அவர்களை விசாரிக்கையில் உடுமலைபேட்டையை சேர்ந்த நல்லியப்பன் என்ற நடராஜ் (வயது 48) என்பதும், ஆரணியில் இருந்து அரிசி சிப்பம்  ஏற்றிக் கொண்டு  பவானிசாகர் அருகே உள்ள யூனியன் ஆபீஸ் பின்புறம் உள்ள ஒரு அரிசி மண்டிக்கு கொண்டு செல்வதாக (பில்) போட்டு சுமார்  850-க்கும் மேற்பட்ட அரிசி சிப்பங்கள் ஏற்றிக் கொண்டு வந்து திருப்பூர் புறநகர்  பகுதிகளில் விற்பனை செய்வது தெரியவந்தது.

 


 

இதனால் கோவம் அடைந்த கவிதா இதுபோல் தரமற்ற அரிசி அனுமதியின்றி விற்பதால் முறையான அனுமதியுடன் வியாபாரம் செய்யும் எங்கள் வியாபாரம் பாதிக்கும் என்று தட்டி கேட்டுள்ளார். இதற்க்கு லாரி ஓட்டுநர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரிசி ஆலை உரிமையாளர்கள்சங்கத்தினர் லாரியை சிறை பிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தாசில்தார் சுந்தரம், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

 

 

 

இதுபற்றி அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் துரைசாமி பேசுகையில் :-  

பல்வேறு பகுதிகளில் இருந்து  போலியான பிராண்டு பெயரில் பை தயாரித்து தரமற்ற அரிசியை லாரிகளில் கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு என்று பொதுமக்களும் ஆர்வமாக அதை வாங்கி செல்கின்றனர். பின்னர் அதனை சமைக்கும் போதுதான் தெரிகிறது. தரமற்ற அரிசி என்று. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம்மடைகின்றனர். மேலும் இது போன்ற விற்பனையால் கடை அனுமதி வாங்குவதில்லை முறையான வரி செலுத்த வேண்டியதில்லை. அரசயும் பொதுமக்களையும் ஏமாற்றி வருகின்றனர். இதனால் முறையான அனுமதியுடன் அரிசி ஆலை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பெரிதும்  பாதிக்கப்படுகின்றனர்.  இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது  வேதனையாக உள்ளது என்று தெரிவித்தார்.

 

மேலும்  இது குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஊரக போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.