வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கனமழை

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்து. நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு போன்ற இடங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.



அதேபோல, திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், வாலாஜா, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேல் அரசம்பட்டு அருகேயுள்ள உத்திரகாவேரி சிற்றாற்றிலும், அமிர்தி நாகநதி ஆற்றிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.


அதேபோல, தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் வாணியம்பாடி அடுத்த கனகநாச்சியம்மன் கோயில் அருகேயுள்ள தடுப்பணை வேகமாக நிரம்பி வருகிறது. ஆம்பூர் வனப்பகுதியை யொட்டி மழை கொட்டி தீர்ப்பதால் வனப்பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.


குடியாத்தம் அடுத்த மோர்தானா நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஓரிரு நாளில் மோர்தானா அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறி வரும் உபரி நீர் கவுண்டயன் ஆற்றில் கலந்து அதையொட்டியுள்ள ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.


அதேபோல, திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அணையும் வேகமாக நிரம்பி வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு கொட்டாறு - பெரியாறுக்கு குறுக்கே கட்டப்பட்ட ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்க ஆணையின் மொத்த கொள்ளளவு 112.2 மில்லியன் கன அடியாகும். அணையின் நீளம் 1080 மீட்டர், உயரம் 8 மீட்டராகும். தற்போதைய நீர் இருப்பு 5.3 மீட்டர். இது 48 சதவீதமாகும்.


கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி ஆண்டியப்பனூர் முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு 2 ஆண்டுகள் கழித்து தற்போது ஜவ்வாதுமலையில் பெய்து வரும் தொடர் மழையால் ஆண்டியப்பனூர் அணை வேகமாக நிரம்பி வருவதாகவும், இது போன்ற மழை ஒருவாரத்துக்கு தொடர்ச்சியாக பெய்தால் ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறினால், சின்னசமுத்திரம் ஏரி, வெள்ளேரி, மாடப்பள்ளி ஏரி உள்ளிட்ட 9 ஏரிகள் நிரம்பும். 14 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் ஆண்டியப்பனூர் அணை வேகமாக நிரம்ப வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்: ஆற்காடு 4.0 மி.மீ., ஆற்காடு 240 மி.மீ., காவேரிப்பாக்கம் 24.0 மி.மீ., சோளிங்கர் 6.0 மி.மீ., வாலாஜா 8.4 மி.மீ., அம்மூர் 12.8 மி.மீ., கலவை 9.2 மி.மீ., என மொத்தம் 78.4 மி.மீ., அளவுக்கு பதிவாகியிருந்தது.


வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் 3.0 மி.மீ., காட்பாடி 27.5 மி.மீ., மேல்ஆலத்தூர் 4.6.மி.மீ., பொன்னை 5.4 மி.மீ., வேலூர் 18.5 மி.மீ., என மொத்தம் 91.20 மி.மீட்டர் அளவுக்கு பதிவாகியிருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில், ஆம்பூர் 1.6.மி.மீ., திருப்பத்தூர் 2.4 மி.மீ., வாணியம்பாடி 6.0 மி.மீ., வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை 3.0 மி.மீ., என 21.6 மி.மீட்டர் அளவுக்கு மழையளவு பதிவாகியிருந்தது


Previous Post Next Post