வேலூரில் கணவர் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி  - ஒரு குழந்தை பரிதாப பலி

வேலூரில் கணவர் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி  - ஒரு குழந்தை பரிதாப பலி - உறவினர்களுக்கு உருக்கமான கடிதம்

 


 

வேலூர்மாவட்டம், வேலூர்  தோட்டப் பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்  நரேஷ்குமார். இவருடைய மனைவி கோமதி (வயது 27) , மகன் நித்தில்குமார் (5), மகள் ரியாஸ்ரீ (3) .  கடந்த மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டு நரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார் .இதனால் கோமதி கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டார்.

இரவு குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டிலிருந்த கொசு மருந்தை மகன், மகளுக்கு கொடுத்தார். பின்னர் அதை அவரும் குடித்தார். மயங்கிக் கிடந்த 3 பேரையும் அவரது குடும்பத்தினர் மீட்டு வேலூர் தனியார்( CMC) ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ரியாஸ்ரீ பரிதாபமாக இறந்தார். கோமதியும் அவரது மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கோமதி அவரது உறவினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க என்னால அவர் இல்லாமல் வாழ முடியவில்லை. சின்ன சின்ன விஷயம் அவரை ஞாபகபடுத்துகிறது. அவர் இல்லாத வாழ்க்கையை என்னால சத்தியமா வாழ முடியாது. அவர்தான் எங்க உலகமே. அவர் யாருக்குமே கஷ்டம் கொடுக்காம வாழனும்னு சொல்லுவாறு அதனால நானும் என் 2 பிள்ளைகளும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம சந்தோசமா மேலோகத்தில் வாழப்போறோம் என கூறியுள்ளார்.

 

வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தோட்டப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.