மணியாச்சி அருகே கணவனை கொலை செய்த மனைவி கைது.!


தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபூவாணி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரியப்பன் (56) இவரது மனைவி பேச்சியம்மாள் (44). இருவரும் தங்களுக்குள் ஏற்ப்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களாக தனியாக வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று  மாரியப்பன் கீழபூவாணியில் உள்ள ஒரு புஞ்சை நிலத்தில் கல்லால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் கிடந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் பாளையங்கோட்டை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மணியாச்சி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நேற்று மாலை பேச்சியம்மாள் கீழபூவாணியில் உள்ள ஒரு புஞ்சை நிலத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, அப்போது  அங்கு குடிபோதையில் வந்த மாரியப்பன் பேச்சியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பேச்சியம்மாள் கல் மற்றும் கம்பால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மணியாச்சி காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தன் மாரியப்பனின் மனைவி பேச்சியம்மாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.