வல்லநாட்டில் செல்போனில் நேரத்தை செலவிட்ட தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணன்.!


தூத்துக்குடி அருகே உள்ள வல்லநாடு   வசவப்பபுரம்  பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலைமுத்து. விவசாயியான இவருக்கு மனைவியும் மூன்று மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

அதில் மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகவிட்டது. மாலைராஜா ( 20) என்ற மகனுக்கும்  கவிதா (17) என்ற மகளுக்கும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் கவிதா தனது செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதை அவரது அண்ணன் மாலைராஜா கண்டித்துள்ளார். பல தடவை கண்டித்தும் கவிதா செல்போனில் நேரத்தை செலவிடுவதை நிறுத்தாத நிலையில் அவரது அண்ணன் மாலை ராஜா நேற்று மீண்டும் கண்டித்துள்ளார் .

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த  அண்ணன் மாலை ராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக தங்கை கவிதாவை வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸ்  இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கவிதாவை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில்,  தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயகுமார், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். 

இந்நிலையில் தப்பி ஓடிய மாலை ராஜாவை கைது செய்து முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.