பள்ளிகள் திறப்பு; தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்!


தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி,  9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை   பள்ளிகள் திறக்க முதல்வர்  அனுமதி அளித்துள்ளார். 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், தெரிவித்ததாவது:

"தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட பள்ளிகள் திறப்பு குறித்த அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

மாணவர்கள்/ஆசிரியர்கள்/பணியாளர்களின் உடல் நிலையினை அவ்வப்போது கண்காணித்து ஆலோசனைகள் வழங்கிட மற்றும் ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்களை சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி துறையினர் மாவட்டத்தில் உள்ள 88 அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு கிருமி நாசினி தெளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களை சுத்தம் செய்திட வேண்டும்.

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யவும் போக்குவரத்து வசதிகள், குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி ஏற்படுத்துதல், பழுதடைந்த கட்டிடங்களை சரிசெய்தல் முதலான ஆயுத்தப்பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும். 

விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குப் புதிதாக படுக்கை வசதி ஏற்படுத்தித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்தல், 3 வேளைகளில் (காலை, மதியம், மாலை) கைகளை சுத்தம் செய்தல், தடுப்புகள் பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும், 

தொற்று பாதித்த நபர்களை பள்ளிக்கு வராமல் வீட்டிலிருக்கச் செய்யவும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

 மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் 6 அடி இடைவெளியில் குறியிட்டு அதில் மாணவர்களை செல்லவும், உடல் வெப்பநிலை அறியும் கருவி, ஆக்சிமீட்டர்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். 

பள்ளி துவங்கும் முன்னர் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி பள்ளிகள் திறப்பு குறித்த அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும்  பள்ளி வளாகங்களில் 4 அல்லது 5 இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். 

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளபடி ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் /அங்கன்வாடி ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திட 13 வட்டாரங்களில் 13 பள்ளிகளில் 28.08.2021 

(சனிக்கிழமை) அன்று ஆழ்வார்திருநகரி - புனித மாற்கு மேல்நிலைப்பள்ளி, மூக்குப்பீறி, கருங்குளம் - சுஊ நடுநிலைப்பள்ளி, செய்துங்கநல்லூர், கயத்தார் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கயத்தார் (தெ), கோவில்பட்டி - நகராட்சி நடுநிலைப்பள்ளி, புதுரோடு, 

ஓட்டப்பிடாரம் - டி.எம்.பி.மெக்காவாய் மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம், புதூர்; - இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி, புதூர், சாத்தான்குளம் - புலமாடன் செட்டியர் மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம், திருவைகுண்டம் - ஸ்ரீ கே.ஜி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 

திருவைகுண்டம்,  திருச்செந்தூர் - அருள்மிகு செந்தில் ஆண்டவர் (ஆ) மேல்நிலைப்பள்ளி,  புதுக்கோட்டை, தூத்துக்குடி நகர்புறம் - மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிவந்தாகுளம் உடன்குடி - அரசு நடுநிலைப்பள்ளி, உடன்குடி, விளாத்திகுளம் - ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, விளாத்திகுளம் ஆகிய பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே பள்ளிகளில் தமிழக அரசின் சுகாதாரத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/கூடுதல் ஆட்சியர் சரவணன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு.முருகவேல், துணை இயக்குநர்கள் மரு.போஸ்கோராஜா, மரு.பொற்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபானி, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சசிரேகா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post