தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ததுதான் திமுகவின் நூறு நாள் சாதனை - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!


சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஆளுநரை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் என்ற அடிப்படையில் திமுக அரசு நடந்து கொள்கிறது. திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது. 

ஊரக வேலை உறுதித் திட்டத்தை அரசு முடக்கி வைத்துள்ளது. அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு வழக்குகளை தொடுக்கிறது. அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது திமுக பொய் வழக்கு போடுகிறது. 

கடந்த கால ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை கிடப்பில் போட்டு முடக்கி வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ததுதான் திமுகவின் நூறு நாள் சாதனை.

தேர்தல் அறிக்கைக்கும் கோடநாடு வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோடநாடு வழக்கு என்பது நீதிமன்றத்தில் உள்ளது. அதை எப்படி தேர்தல் வாக்குறுதியாக திமுக அளிக்க முடியும். கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் பொய் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். 

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் திமுக அரசு நடந்து கொள்கிறது. கோடநாடு வழக்கில் சயானுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்'' என்று கூறினார்.