தினமும் சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவு, தலித்துகள், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி ரிப்போர்ட்...!


கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

2019ஆம் ஆண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 236 வழக்குகள் பதியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3 லட்சத்து 71 ஆயிரம் 503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பலாத்கார வழக்குகள் மட்டும் 27 ஆயிரத்து 46 என்றும், நாளொன்றுக்கு சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ராஜஸ்தானில் 5 ஆயிரத்து 310 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கொரோனா பேரிடர் காலத்தில், நாட்டில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள், பெருமளவில் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

தலத்துகள், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... 2019ஆம் ஆண்டை விட 9.4% அதிகரித்துள்ளது...

கொரோனா பேரிடர் காலத்தில், இந்தியாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிப்புக்கு உள்ளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்தாண்டு, மார்ச் மாதம் 25ஆம் தேதி தொடங்கிய 68 நாள் ஊரடங்கு காலத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டில் மட்டும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, மொத்தம் 50 ஆயிரத்து 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இது 2019ஆம் ஆண்டை விட 9 புள்ளி 4 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 25 சதவீத குற்றங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக மொத்தம் 12 ஆயிரத்து 714 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

பீகாரில் 7 ஆயிரத்து 368 வழக்குகளும், ராஜஸ்தானில் 7 ஆயிரத்து 17 வழக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 6 ஆயிரத்து 899 வழக்குகளும் பதியப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதேசமயம் பழங்குடியின சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் சம்மந்தமாக, மொத்தம் 8 ஆயிரத்து 272 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 புள்ளி 3 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post