தூத்துக்குடி மாவட்ட இளையோர்களுக்கான தடகள போட்டி - எஸ்.பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் தடகளப்போட்டியை இன்று 

தூத்துக்குடி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து  போட்டியை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக அளவு பதக்கங்கள் பெற்றுள்ளது. தற்போது விளையாட்டுப்போட்டி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். 

இதுபோன்ற போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று, தோல்வியடைந்துவிட்டால் மனம் தளராமல், மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு அடுத்த முறை வெற்றி பெற்றுவிடலாம் என்ற விடா முயற்சியுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு விளையாட்டும் முக்கியமானது. 

தேர்வுகளில் தோல்வியடையும் சில மாணவ, மாணவிகள் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை முடிவு எடுக்கின்றனர், இது முற்றிலும் தவறு, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களில் பங்கேற்பதன் மூலம் வெற்றி, தோல்வியை எதிர்கொள்ளக்கூடிய அளவிற்கு மன தைரியம் வரும். 

மாணவ, மாணவிகள் கல்வியுடன் சேர்த்து இதுபோன்ற போட்டிகளிலும் அதிக அளவில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று  விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பேட்ரிக், தூத்துக்குடி மாவட்ட தடகள கழக செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் அருள்சகாயம் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். 

தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர கணேஷ், தென்பாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், தென்பாகம் தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.