வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியவர் மாயம் - 48 மணி நேரத்தில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார்


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பத்துபட்டி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் வீரசின்னு (36) என்பவர் துபாய் பக்ரைன் பகுதியில் கடந்த 2 வருடங்களாக கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலெட்சமி என்ற மனைவியும், 9 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில் துபாய்க்கு வேலைக்கு சென்றிருந்த வீரசின்னு தனது மனைவியிடம் செல்போன் மூலமாக 20.10.2021 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து விடுவதாக தெரித்துள்ளார். அதன்படி அவரது மனைவி பாக்கியலெட்சுமி தனது உறவினர்களான அழகு மற்றும் சமுத்திரராஜ் ஆகிய இருவரையும் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி தனது கணவர் வீரசின்னுவை அழைத்து வருமாறு கூறியுள்ளார். 

இதனையடுத்து மேற்படி இருவரும் சென்னை விமான நிலையம் சென்று பார்க்கும்போது வீரசின்னு அங்கு இல்லாததால், அவர் வரவில்லை என அவரது மனைவி பாக்கியலெட்சுமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே பாக்கியலெட்சுமி துபாயிலுள்ள வீரசின்னுவின் நண்பரான வேல்முருகன் என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதில் வீரசின்னுவை விமானத்தில் ஏற்றி விட்டதாகவும் தற்சமயம் அங்குதான் வந்திருப்பார் என்றும் கூறியுள்ளார். 

இதனையடுத்து பாக்கியலெட்சுமி தனது கணவரை சென்னையிலுள்ள அவரது உறவினர் வீடுகளில் தேடியுள்ளார், 23.10.2021 வரை அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் 24.10.2021 அன்று பாக்கியலெட்சுமி தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்; மேற்பார்வையில் எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது, புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகம், 

மாசார்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் தலைமை காவலர் முகைதீன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து காணாமல் போன வீரசின்னுவை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் காணாமல் போன வீரசின்னுவை சென்னையில் பல்வேறு இடங்களில் புகைப்படத்தை வைத்து விசாரணை செய்தபோது சென்னை புளிச்சனூர் பகுதியில் ஒருவர் இரண்டு நாள்களாக சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் அவரை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், 

அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார், இறுதியில் அவர்தான் வீரசின்னு என்பதை உறுதி செய்த தனிப்படையினர் அவரை சென்னையிலிருந்து அழைத்து வந்து அவரது மனைவி பாக்கியலெட்சுமியிடம் இன்று ஒப்படைத்தனர். காணாமல்போனவரை விரைந்து கண்டுபிடித்து உறவினரிடம் ஒப்படைத்த மேற்படி விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

Previous Post Next Post