ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு!.. ரூ.250 கோடிக்கும் மேல் முறைகேடு!..ரூ.80 கோடிக்கு போலி பில்கள்! - சரவணா ஸ்டோர்ஸ் ஐடி ரெய்டில் அம்பலம்!! -வருமான வரித்துறை அறிக்கையில் தகவல்.!*


வருமான வரித்துறை சோதனையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சுமார் 1000 கோடி ரூபாய் விற்பனை வருவாயை மறைத்து வந்தது தெரியவந்தது. சரவணா செல்வரத்தினம் நிறுவனம் ரூபாய் 80 கோடி அளவிற்கு போலி பில்கள் தயாரித்து அதன் மூலம் பொருட்கள் வாங்கியுள்ளது.

தமிழகத்தின் பிரபலமான வணிக நிறுவனங்களான சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களில் கடந்த 1-ம் தேதி காலை 8.30 மணியளவில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த இரண்டு வணிக நிறுவனங்களும் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி என சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 1,000 கோடி ரூபாய் விற்பனை வருவாயை மறைத்து வந்தது தெரியவந்தது.


மேலும் இந்த நிறுவனம், தங்களுக்குச் சொந்தமான துணிக்கடை, நகைக்கடை, ஃபர்னிச்சர் கடை ஆகிய கடைகளுக்கு  தேவையான பொருட்களை கணக்கில் காட்டாமல் ரூ. 150 கோடி அளவில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சரவணா செல்வரத்தினம் நிறுவனம் சுமார் ரூபாய் 80 கோடி அளவிற்கு போலி பில்கள் தயாரித்து அதன் மூலம் பொருட்கள் வாங்கியதும் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதேபோல கணக்கில் காட்டாமல் தங்கம் வாங்கியதற்கு உண்டான ஆவணங்களும் வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கியுள்ளது. மேலும் சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் காட்டப்படாத வாடகை ரசீதுகள் மற்றும் ஸ்க்ராப் விற்பனை தொடர்பான ஆவணங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்விரு நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 10 கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 6 கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும், சோதனை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post