"'மீன் கூடையா? கீழே இறங்கு அடாவடி செய்த அரசு பஸ் டிரைவர், நடத்துநர்.. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தலின் பேரில் அதிரடி சஸ்பெண்ட்.!

 


#கன்னியாகுமரியில் மீனவ மூதாட்டி ஒருவரை துர்நாற்றம் அடிப்பதாகக் கூறி அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் அரசுப் பேருந்தில் இருந்து இறக்கவிட்டுள்ள சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தலின் பேரில் பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, 3 பேரையும் சஸ்பென்ட் செய்து குமரி மாவட்ட போக்குவரத்து கழக பொது மேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் "மீன் வித்திட்டா வர்ற.. நாறுது இறங்கு இறங்கு" என கூறி அரசு பேருந்தில் இருந்து நடத்துநரால் இறக்கி விடப்பட்ட மீனவ மூதாட்டி ஒருவர் பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் நியாயம் கேட்கும் பரிதாப வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், வயது முதிர்ந்த மூதாட்டியான இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலை தலைசுமையாக ஆக மீன்களை சுமந்து குளச்சல் பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள மீன்களை மாலையில் குளச்சல் மார்க்கெட்டில் விற்பனை செய்வார்.

மீன்களை விற்பனை செய்தபின் இரவு மகளிருக்கான அரசு இலவச பேருந்தில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் செல்வம் நேற்று மீன்களை விற்பனை செய்துவிட்டு இரவு குளச்சல் பேருந்து நிலையத்தில் வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். செல்வத்தைக் கண்ட பேருந்து நடத்துநர் அவர் மீது துர்நாற்றம் வீசுவதாகவும், மீன் கூடை நாற்றத்தால் பேருந்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்றதோடு, 'மீன் வித்திட்டா வர்ற.. நாறுது இறங்கு இறங்கு' எனக் கூறி பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

பல பயணிகள் முன் நடத்துநர் திட்டியதால் அவமானமும் ஆத்திரமுமடைந்த மூதாட்டி செல்வம் , பேருந்து நிலைய நேரக் கட்டுப்பாட்டு அலுவலகம் முன் சென்று இது என்ன ஞாயம் பேருந்தில் ஏறிய பொம்பளையை எப்படி இறக்கி விடலாம் பெட்டிசன் கொடுப்பேன் கத்தி கூச்சலிட்டதோடு தனது ஆதங்கத்தை அங்கு நின்ற பொதுமக்களிடம் கொட்டி தீர்த்தார்.

இறங்கி விட்ட நடத்துநரோ என்ன நடத்தது என்று ஒன்றும் அறியாதவர் போல் நேரக்கட்டுப்பாட்டு அலுவலகம் முன் நின்று கொள்ள அந்த மூதாட்டியோ 'மீன் வித்திட்டா வர்றே நாறும் இறங்கு இறங்கு' என்று நடத்துநர் கூறியதாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்ததோடு வாணியக்குடி வரை நான் நடக்க வேண்டுமா என கண்கலங்கிய படி பேருந்து நிலைய சுற்று சுவரில் சாய்ந்தபடியே நின்றார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான மனோதங்கராஜ் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து களத்தில் இறங்கிய அமைச்சர், குமரி மாவட்ட போக்குவரத்து துறை அலுவலர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதன் பெயரில் உடனடியாக பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நடந்த சம்பவத்திற்காக போக்குவரத்து துறையின் குமரி மாவட்ட துணை இயக்குனர் (இயக்கம் & ஆய்வு) ஜெரோலின் மூதாட்டியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.


Previous Post Next Post