தமிழகத்தில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று - ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தம்: மா.சுப்பிரமணியன்


கொரோனா உறுதி செய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்புக்குள்ளாகின்றனர், பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுவதால், தமிழகத்தில் ஒமைக்ரான் சோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார். இதன்பின்னர் அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள ஆலோசனை மையத்தையும் ஆய்வு செய்தார். 

அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். 

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அப்போது அவர் கூறுகையில்:- கொரோனா உறுதி செய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்றும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா தொற்றும் தான் வருகிறது. ஒமைக்ரான் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுகின்றனர். இதனால், தமிழகத்தில் ஒமைக்ரான் சோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுவிட்டது. 

டெல்டாவும், ஒமைக்ரானும் இணைந்து இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறியே இருப்பதால், வீடுகளிலேயே தனிமைபடுத்திக் கொள்கின்றனர். 

சென்னையில் 26,000 பேர் இப்போது கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில் இதில் சுமார் 21,987 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். இணை நோய் உள்ளவர்கள் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வரலாம். லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். சென்னையில் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்க 178 மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளை பிரதமர் மற்றும் முதல்வர் தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளனர். டெல்லியில் இருந்து பிரதமர் காணொலி மூலம் திறந்து வைப்பார். நாளை மாலை 4-5 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நிகழ்ச்சி நடைபெறும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமை செயலகம் வர இருக்கிறார். 11 கல்லூரிகளில் 1,450 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை வருவதால், மெகா தடுப்பூசி முகாமை இந்த வாரத்திற்கு பதில் அடுத்தவாரம் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இப்போதைக்கு முழு ஊரடங்கு தேவையில்லை. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு போதும். ஊரடங்கால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட கூடாது என முதல்வர் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post