சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - 9 போலீசார் மீது வழக்குப்பதிவு !

சென்னை கொடுங்கையூரில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 9 காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூர் போலீசார் எம்.ஆர். நகர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம் (வயது 21) என்பவரிடம் முககவசம் அணியவில்லை என அபராதம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு மறுத்த அவர், போலீஸ்காரர் உத்தரகுமார் (31) என்பவரின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்துல்ரஹீம் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கைதான சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம், போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தன்னை விடிய விடிய சரமாரியாக தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், மேலும் முககவசம் அணிந்து வந்த தன்னை முககவசம் அணியவில்லை என கூறி அபராதம் கேட்டதாகவும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதுபற்றி விசாரிக்கும்படி வடக்கு மண்டல இணை கமிஷனருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய வடக்கு மண்டல இணை கமிஷனர், சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் ஏட்டு பூமிநாதன் மற்றும் போலீஸ்காரர் உத்தரகுமார் ஆகிய இருவரும் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு, தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து காவல் ஆய்வாளர் நஜிமா உள்பட் 9 பேர் காவல்துறையினர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் தீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post