டோல்கேட் கழிவறையில் அரசு ஊழியரை கடித்த பாம்பு.! - விடாமல் காலை கவ்வியதால் அலறி ஓடிய பெண் மருத்துவமனையில் அனுமதி!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் கழிவறையில் கிடந்த பாம்பு கடித்ததால் அரசு பெண் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாகர்கோவிலை அடுத்துள்ள அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் ஹரிகோபால் மனைவி பஞ்சவர்ணகவிதா (45). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலுவலக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அதன்பின் பணி மாறுதலாகி நேற்று முன்தினம்(7ம்தேதி) தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார். 

முதல் நாள் என்பதால் தனது கணவர் ஹரிகோபாலுடன் பணி முடித்து காரில் நாகர்கோவில் சென்றுள்ளார். வரும் வழியில் இரவு நாங்குநேரி டோல்கேட்டில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு பஞ்சவர்ண கவிதா கழிவறைக்கு சென்றுள்ளார். 

அப்போது கழிவறை வாசலில் கிடந்த பாம்பு கவிதாவின் காலில் கடித்துள்ளது. மேலும் பாம்பு கடியை விடாமல் கவ்விக்கொண்டு இருந்ததால் பதறியடித்து காலைச் சுற்றிய பாம்புடன் கவிதா வெளியே வந்துள்ளார். அதன்பின் பாம்பு கடியை விட்டு நழுவிச் சென்றுள்ளது. 

உடனே ஹரி கோபால் தன் மனைவியை அதே காரில் முதலுதவிக்காக நாஙகுநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து சிகிச்சை முடித்து நேற்று பிற்பகல் அரசு மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பியுள்ளார். டோல்கேட் கழிவறையில் பெண் ஊழியரை பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post