சென்னிமலை முருக பக்தர்கள் சார்பில் நடக்கவிருந்த கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் ரத்து

சென்னிமலை: ஜன 9


சென்னிமலை தைத் தேரோட்ட நிகழ்வு குறித்து அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்ட எந்த தகவலும் வராத காரணத்தினால் புதன்கிழமையன்று முருக பக்தர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற திங்கட்கிழமை அன்று காலை தேர் நிலை சேர்க்கும் இடத்தில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. 

மேலும் இப்போராட்டத்திற்கு பொதுமக்களையும் வணிக நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அரசின் சார்பில் பெருந்துறை தாசில்தார் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பெருந்துறை தாசில்தார் கார்த்திக் தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், சேர்மன் காயத்ரி இளங்கோ, சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட அரசு தரப்பில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோவில் மண்டப கட்டளைதாரர், நாட்டு மண்டப கட்டளை மற்றும் பல்வேறு சமூக கட்டளை நிர்வாகிகள், திருவிழா உபயதாரர், நன்கொடையாளர், அரசியல் கட்சியினர், வர்த்தகசங்கங்கள், கோவிலில் செயல்படும் பல்வேறு கமிட்டி நிர்வாகிகள், தேரோட்ட விழா நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.

 அவர் உத்தரவின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து முருக பக்தர்கள் சுமுகமான முடிவு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திங்கள் அன்று நடைபெறவிருந்த கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை ரத்து  செய்ததாக அறிவித்துள்ளனர்.

Previous Post Next Post