அடித்து நொறுக்கப்பட்ட தனியார் மதுபான பார்..! பொங்கியெழுந்த மக்கள்!- பாருக்கு சீல் வைத்த தாசில்தார்!

பள்ளி மற்றும் கோவில்கள் இருப்பதால் உடனடியாக தனியார் மதுபானக்கூடம் மூடப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மீறி செயல்பட்ட தனியார் மதுபான கூடம் பொதுமக்களாலேயே அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் விருநகரில் அரங்கேறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அன்னபூர்ணயாபுரம் அருகே தனியார் மதுபான கூடம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளிலிருந்தே அப்பகுதி மக்கள் அந்த மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அருகிலேயே பள்ளி மற்றும் கோவில்கள் இருப்பதால் உடனடியாக தனியார் மதுபானக்கூடம் மூடப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில் எதிர்ப்பை மீறி மதுபான கூடம் செயல்பட்டு வந்தது. இது தொடர்பாகப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது.

இப்படி பல முயற்சிகள் எடுத்தும் அந்த மதுபானக்கூடம் மூடப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த தனியார் மதுபான கூடத்தை செங்கற்களால் அடித்து நொறுக்கினர். 50 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள மதுபாட்டில்கள், சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டது. 

அதோடு அடித்து நொறுக்கப்பட்ட மது கூடத்தின் முன் பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை தாசில்தார், காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுபான கூடத்தை நிரந்தரமாக மூடினால்தான் அங்கு இருந்து செல்வோம் என்று மக்கள் கூறினார்கள். இதனை தொடர்ந்து தனியார் மதுபான கூடத்தை பூட்டி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். 

மேலும் தனியார் மதுபான கூடத்தை அடித்து நொறுக்கிய அன்னபூர்ணியாபுரம் கிராம மக்கள் 50 பேர் மீது வெம்பக் கோட்டை போலீசார் வழக்கு பதிவுப்செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அன்னபூர்ணாயாபுரத்தில் நீண்ட நேரம் பதற்றம் நிலவியது. அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post