திருப்பூரில் கட்டிய புதிதிலேயே ஒழுகும் பிரம்மாண்ட குடிநீர் தொட்டி!

 திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நீர் கசிவு ஏற்ப்பட்டு உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 250 கோடி மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் 26 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது.  இதில் சின்னாண்டிபாளையம் பகுதியில் சிறிய குளத்தில் கட்டப்பட்டுள்ள 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் ஒன்றாகும்.

இந்த மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் பல இடங்களில் நீர் கசிந்து சொட்டு சொட்டாக வெளியேறி வருகிறது. 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கக் கூடிய இந்த குடிநீர் தொட்டி கட்டிய புதிதாக இருக்கும் போதே இத்தணை நீர் கசிவு ஏற்ப்பட்டு உள்ளதால் குடிநீர் தொட்டிக்கு ஆபத்து ஏற்ப்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். 

இதுகுறித்து சின்னாண்டிபாளையம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: 

சின்னாண்டிபாளையம் சின்னக்குளத்தில், இந்த தொட்டிக்கு அருகில் குளத்தில் கட்டப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு மைய கட்டிடம் மண்ணில் புதைந்தது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வீணானது ஆனாலும் அந்த பகுதியில் யாரும் இல்லாத காரணத்தால் சேதம் எதுவும் இல்லை. 

இந்த  நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் இடிந்து விழுமோ என்று  அச்சமாக உள்ளது. சின்னக்குளத்தில் தேங்கக்கூடிய தண்ணீரானது மாதக்கணக்கில் குடிநீர் தொட்டி வளாகத்தில் குளம்போல தேங்கி இருக்கிறது. ஒவ்வொரு பில்லர்களையும் தண்ணீர் சூழ்ந்து அந்தப்பகுதியே சகதியாக இருக்கிறது. அருகிலேயே தண்ணீர் தேங்கியதால் ஒரு தொட்டி நிலத்தில் அமிழ்ந்த போதும் கூட, இந்த பிரச்சினை பற்றி கவலைப்படாமல் அதிகாரிகள் இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் இந்த குடிநீர் தொட்டியின் அடிப்பகுதியில் 3 இடங்களிலும், பக்கவாட்டுப்பகுதிகளிலும் ஏராளமாக நீர் கசிகிறது. இந்த தொட்டிக்கு பெரிய சேதம் ஏதும் ஏற்படும் முன்னர் இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர். 

 இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘ இது போல கட்டிய புதிதில் தண்ணீர் கசிவு இயல்பானது. அதை அடைத்து விடுவோம். குடிநீர் தொட்டி வளாகத்தில் தண்ணீர் தேங்குவது என்பது இந்தப் பகுதியில் உள்ள நீரோட்டத்தால் தான். மாநகராட்சி கொடுத்த இடத்தில் தான் நாம் தொட்டி கட்டி இருக்கிறோம். வளாகத்தில்  தேங்கும் தண்ணீரை  மோட்டார் வைத்து வெளியேற்றி வருகிறோம். இந்த இடம் மண்பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் தான் தொட்டி கட்டப்பட்டது. தொட்டிக்கு எதுவும் ஆகாது அச்சப்பட வேண்டாம் என்றார். 

 கட்டிய புதிதிலேயே ஒழுகுது., தண்ணீர் தொட்டி கட்டுமானத்தில் மாதக்கணக்கில் குளமாய் தண்ணீர் தேங்கி அஸ்திவாரம் சேறும் சகதியுமாக இருக்குது, எப்படி அச்சப்படாமல் இருக்க முடியும் என்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள். சீக்கிரம் இந்த பிரச்சினையை அதிகாரிகள் சரி செய்தால் நலலது. 

Previous Post Next Post