பொங்கல் பரிசுத் தொகுப்பு : தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை -முதலமைச்சர் உத்தரவு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு; தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.,21) நடைபெற்றது. பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்தும் முறையாக திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம், சரியான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன. மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் சில குறைபாடுகள் இருந்ததாக புகார்கள் வரபெற்றன. இவற்றை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உரிய தரத்துடன் பொருட்களை வழங்கத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது எனவும் முதல்வர் தெரிவித்தார். நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படம் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டுமென்றும், தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றம் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post